தென்காசி: தென்காசி மாவட்டத்தில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் அதிவேகமாகவும், அபாயகரமாகவும் பைக் ரேஸில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் உத்தரவிட்டார். அதன்படி தனிப்படை அமைக்கப்பட்டு வடகரை, பண்பொழி திருமலை கோவில் சாலை, இலத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் பைக் ரேஸில் ஈடுபடும் இளைஞர்களைக் கண்காணித்து வந்தனர்.
இந்த நிலையில் தீபாவளியை முன்னிட்டு, பொதுமக்களை அச்சுறுத்தும் விதத்தில் இளைஞர்கள் சிலர் பைக் ரேஸில் ஈடுபட்டு வந்தனர். அதனை இன்ஸ்டாகிராம், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களிலும் அவர்கள் பதிவிட்டு உள்ளனர்.
இதை அறிந்த அச்சன்புதூர் இன்ஸ்பெக்டர் வேல்கனி தலைமையிலான தனிப்படையினர், அவர்களைத் தேடி வந்தனர்.
அப்பொழுது வடகரை கீழத்தெருவைச் சேர்ந்த முகம்மது ஆசிக் (21), வடகரை ரஹ்மானியாபுரம் மேலத்தெருவைச் சேர்ந்த ஷேக் ஒலி(25) ஆகியோர் மீது அச்சன்புதூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். மேலும், புளியரை கொல்லம் மெயின் ரோட்டைச் சேர்ந்த கௌதம் கிருஷ்ணா (24) என்பவர் மீது இலத்தூர் காவல் நிலையத்திலும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டார்.
மேலும், “பல லட்சம் ரூபாய் கொடுத்து வாங்கப்பட்ட வாகனத்தில் சாகசம் நிகழ்த்தி வாகன ஓட்டிகளுக்கும், பொதுமக்களுக்கும் அச்சுறுத்தும் செயல்களில் ஈடுபடும் இளைஞர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படுவர். உயிருக்கு ஆபத்தான நிலையில் இது போன்ற செயல்களில் இளைஞர்கள் ஈடுபடுவதை முற்றிலும் தவிர்த்துக் கொள்ள வேண்டும். இல்லை என்றால், வாகனங்களை பறிமுதல் செய்து, ஒட்டுநர் உரிமம் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கபடும்” என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் அறிவுறுத்தி உள்ளார்.
இதையும் படிங்க: பட்டாசு வெடித்த இளைஞர்களை அரிவாளால் வெட்டிய 5 பேர் கைது.. ஆவடி போலீசார் அதிரடி!