தென்காசி மாவட்டத்தில் 5 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனா வைரஸ் தொற்றிலிருந்து பொதுமக்களை பாதுகாக்க மாவட்ட நிர்வாகம், மாவட்ட காவல்துறையினர் தீவிர தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக காவல்துறையினர் பகல் நேரங்களில் அவ்வப்போது ரோந்து சென்று தேவையில்லாமல் பொதுமக்கள் வருவதை கட்டுப்படுத்துகின்றனர்.
எனினும் பெரும்பாலான பொதுமக்கள் காவல்துறையினரின் அறிவுறுத்தலையும் மீறி தேவையில்லாமல் வெளியில் சுற்றி வருகின்றனர். தற்போது ஐந்து பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், பொதுமக்கள் இதுபோன்று தேவையில்லாமல் வெளியில் சுற்றித் திரிந்தால், தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து போலீசார் தற்போது தங்களது ரோந்து பணிகளில் தீவிரம் காட்டியுள்ளனர். அதன்படி தென்காசி நகர்ப்பகுதிகளில் உள்ள ஒவ்வொரு தெருவுக்கும் சென்று பொதுமக்களிடம் நேரடியாக ஒலிப்பெருக்கி மூலம் அறிவுறுத்தி வருகின்றனர். அப்போது போலீசார், தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள், நாங்கள் உங்களை எச்சரிக்கவில்லை, வெளியில் வராதீர்கள் என்று அறிவுறுத்துகிறோம்.
நோய் வேகமாக பரவி வருகிறது. இந்த நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கவில்லை, எனவே தயவு செய்து தேவையில்லாமல் வெளியில் வராதீர்கள். உங்களுக்கு ஏதாவது அத்தியாவசிய பொருள்கள் வேண்டுமென்றால் வீட்டில் ஒருவர் மட்டும் வெளியே வந்து வாங்கி செல்லுங்கள் என அறிவுத்தினர்.
போலீசாரின் இந்த நடவடிக்கையை தென்காசி நகர காவல்துறை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இதையும் படிங்க: தென்காசியில் 2 பேருக்கு கரோனா உறுதி - மாவட்ட ஆட்சியர் தகவல்