தென்காசி: கேரள மாநிலம் ஆலப்புழா, கோட்டயம் மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் பரவிவரும் பறவை காய்ச்சல் காரணமாக சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாத்துகள், கோழிகள் இறந்துள்ளன. தமிழ்நாட்டிற்குள் பறவைக்காய்ச்சல் வராமல் தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதுடன், கேரளாவிலிருந்து வரும் கோழி, வாத்துகளின் முட்டைகள், இறைச்சி தீவனங்களைக் கொண்டுவரும் வாகனங்களைத் திருப்பி அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்காக, தமிழ்நாடு - கேரள எல்லைப் பகுதியான தென்காசி மாவட்டம் புளியரை சோதனைச்சாவடியில் அமைந்துள்ள பறவைக்காய்ச்சல் நோய்த்தடுப்பு முகாம் சார்பில் நேற்று (ஜன. 05) காலை முதல் தடுப்பு நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன. பறவைக்காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை, மாவட்ட ஆட்சியர் சமீரன் இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வுமேற்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "புளியரை சோதனைச்சாவடியில் கால்நடை மருத்துவர் தலைமையில் ஐந்து பேர் கொண்ட மூன்று குழுக்கள் அமைக்கப்பட்டு, சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டுவருகிறது.
இதுவரை எந்தவிதமான கோழி, வாத்து இறைச்சிகள் தமிழ்நாட்டிற்குள் வரவில்லை. மாவட்டத்திலுள்ள 223 பண்ணை உரிமையாளர்களுக்குப் பறவைக் காய்ச்சல் தொடர்பாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த ஒரு வாரத்தில் கேரள மாநிலத்திலிருந்து எந்தவித கோழிக்குஞ்சுகளும் பண்ணையாளர்கள் வாங்கவில்லை. மாவட்டத்திலுள்ள நீர்நிலைகளிலும் பறவைகளின் இறப்பு குறித்து கண்காணிக்க வனத் துறை அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது" என்றார்.
இதையும் படிங்க: ஸ்டாலின் மக்கள் கிராம சபையால் மக்களுக்கு பயன் இல்லை: முதலமைச்சர் பழனிசாமி