தென்காசி: மத்திய அரசு பணிகளில் உள்ள காலியிடங்களை நிரப்ப சிவில் சர்வீஸ் தேர்வுகளை யுபிஎஸ்சி நடத்தி வருகிறது. இந்த தேர்வின் மூலமாக மட்டுமே இந்திய ஆட்சிப் பணியின் உயர் அலுவலர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
இந்த தேர்வில் 761 பேர் தேர்ச்சி பெற்றுள்ளது தெரிய வந்துள்ளது. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 36 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தமிழ்நாட்டில் மூன்றாம் இடம்
குறிப்பாக தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த சண்முகவள்ளி என்ற மாணவி தமிழ்நாடு அளவில் மூன்றாம் இடத்தையும், மாணவிகள் தரப்பில் தமிழ்நாடு அளவில் முதலிடத்தையும் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
இதுகுறித்து சண்முகவள்ளி நமது ஈடிவி பாரத் செய்தியாளரிடம் கூறியதாவது, “இந்திய அளவில் நான் 108 ஆவது இடத்தையும், தமிழ்நாடு அளவில் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. எனது விடாமுயற்சிக்கும் கடின உழைப்புக்கும் வெற்றி கிடைத்துள்ளது.
எனது பெற்றோர்கள் நண்பர்கள் அனைவரும் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்துள்ளனர். அவர்கள் என்னை தொடர்ந்து ஊக்கப்படுத்தி வந்தார்கள். பல்வேறு பயிற்சியாளர்கள் எனது தவறுகளை சரி செய்து, இந்த வெற்றியை ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர். எனவே அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
தடைகள் தாண்டி வெற்றி
நான் ஏற்கனவே இரண்டு முறை முயற்சி செய்த முதன்மைத் தேர்வு கடினமாக இருந்ததால், தோல்வி அடைந்தேன். தற்போது மூன்றாவது முயற்சியில் வெற்றி பெற்றுள்ளேன்.
கரோனா காலத்தில் தேர்வுக்கு தயாராவதில் கொஞ்சம் சிரமம் ஏற்பட்டது. குறிப்பாக புத்தகங்கள் வாங்குவதிலும், பயிற்சி மையங்களை தொடர்பு கொள்வதிலும், பயிற்சியாளரிடம் நேரில் பயிற்சிபெறுவதிலும் பல்வேறு தடைகள் ஏற்பட்டது.
இருப்பினும் முழு நம்பிக்கையோடு தேர்வுக்கு தயாரானதால் வெற்றி பெற்றுள்ளேன். இளம் அலுவலராக எனது பணியில் சிறப்பான பங்களிப்பை நிச்சயம் வெளிப்படுத்துவேன்” என்றார்.
இதையும் படிங்க: ஐஏஎஸ் தேர்வில் வெற்றிபெற்ற மாற்றுத் திறனாளி - கடும் முயற்சிக்கு குவியும் பாராட்டுகள்