தென்காசி: செங்கோட்டை நகராட்சியில் உள்ள 11, 12, 13, 14 ஆகிய 4 வார்டுகளில் உள்ள 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு சிறிய அளவிலான வாடகை கட்டடத்தில் ரேசன் கடை அமைந்துள்ளது. இதனால், ரேசன் கடைக்குச் செல்லும் பொதுமக்களும் அங்கு பணியாற்றும் நியாய விலைக்கடை பணியாளர்களும் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதனிடையே நீண்ட நேரம் சாலையில் வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளது.
எனவே, இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குப் பொதுமக்கள் பல முறை புகார் அளித்ததைத் தொடர்ந்து, தற்போது புதிய ரேஷன் கடை கட்டுவதற்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனிடையே, செங்கோட்டை திமுக நகரச் செயலாளராக உள்ள வெங்கடேஷ் என்பவர், புதிய ரேசன் கடை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும், அப்பணிகளுக்கு இடையூறு செய்வதாகவும் கூறப்படுகிறது. இதனால், பொதுமக்களுக்கு அத்தியாவசியமான ரேசன் கடையை அமைக்க முடியாமல் உள்ளதாகவும் அப்பகுதியினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்நிலையில், இதனைக் கண்டித்து நகராட்சி ஆணையாளரிடம் 12-வது வார்டு திமுக கவுன்சிலர் இசக்கி துரை பாண்டியன் தலைமையில் அப்பகுதி பொதுமக்கள் புகார் அளித்தனர். தொடர்ந்து, அத்தியாவசிய தேவையைத் தடுக்கும் ஆளும் கட்சி நிர்வாகியை கண்டித்து அதே கட்சியைச் சேர்ந்த கவுன்சிலர் அங்குள்ள நகராட்சி அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: ஓட்டு கேட்கும் அமைச்சரை சாலையில் நிற்க வைத்து கேள்வி கேட்போம்: சமூக ஆர்வலர் முகிலன்