தென்காசி: மாவட்டத்தின் சுற்றுவட்டார பகுதிகளில் பல நாட்களாகவே பல்வேறு இடங்களில் அதிகமாகவே தண்ணீர் பிரச்சினை நிலவி வருகிறது. மேலும் இது குறித்து தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் அரசு அதிகாரிகளிடத்திலும் ஊர் கிராம மக்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பதாக கடையம் பகுதியில் தண்ணீர் முறையாக வழங்கப்படவில்லை என மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஏராளமான பெண்களும் மற்றும் ஊர் பொதுமக்களும் ஒன்று கூடி போராட்டம் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. இது போன்று தென்காசி மாவட்டம் முழுவதுமாக தண்ணீர் பிரச்சினை அதிகமாகவே நிலவி வருகிறது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள வடக்கு பணவடலி பஞ்சாயத்திற்கு உட்பட்ட திருமலாபுரம் கிராமத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்களுடைய குடிநீர் தேவைக்காக தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் வடக்கு பணவடலி, பணவடலிசத்திரம், சொக்கலிங்கபுரம், திருமலாபுரம் உள்ளிட்ட கிராமங்கள் அடங்கிய பகுதிக்கு குடிநீரானது வழங்கப்பட்டு வந்தது.
ஆனால் கடந்த ஒரு மாத காலமாக திருமலாபுரம் பகுதிக்கு குடிநீர் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் இப்பகுதி மக்கள் குடிநீர் தேவைக்காக நான்கு கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று அருகில் உள்ள கிராமங்களுக்கு சென்று குடிநீர் எடுத்தும் அருகில் உள்ள விவசாய கிணறுகளில் இருந்து தண்ணீர் எடுத்தும் தங்களது குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வந்தனர்.
இதையும் படிங்க: நீர் இன்றி அழியும் தருவாயில் மருத்துவ குணங்கள் நிறைந்த பீர்க்கங்காய்கள் - விவசாயிகள் கலக்கம்!
மேலும் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட உயர் அதிகாரியிடம் பலமுறை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த அப்பகுதியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் காலி குடங்களுடன் அப்பகுதியில் உள்ள பேச்சியம்மன் கோயில் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் போராட்டக்காரர்கள் இடையே பேச்சுவார்த்தை நடத்துவதற்காக சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா பேச்சு வார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. மேலும் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜாவை அப்பகுதி மக்கள், ராஜா ஒழிக! ராஜா ஒழிக! என கோஷங்களை எழுப்பினர். மேலும் தேர்தல் நேரங்களில் எங்களிடம் வந்து வாக்குகள் கேட்க வரக்கூடாது எனவும் அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து அந்த இடத்தை விட்டு சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா புறப்பட்டு சென்றார். மேலும் அப்பகுதி மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.
இதையும் படிங்க: நடுவக்குறிச்சியில் பூத்து குலுங்கும் சூரியகாந்தி பூக்கள் - போதிய விலை இல்லாததால் விவசாயிகள் பாதிப்பு!