தென்காசி: தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் அள்ளித் தரும் வாக்குறுதிகள் எண்ணிலடங்காதவை. அவைகள் சில நேரங்களில் தகுந்த நிதி ஒதுக்கி முறையாக பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும். ஆனால், அதற்குள் பொதுமக்கள் படும் அவஸ்தைகளோ ஏராளாம். அந்த வகையில், எந்த அரசியல் கட்சிகளையும் நம்பி பயனில்லை. இனி நாமே நமது கிராமத்திற்கு ஏதாவது செய்தால்தான் உண்டு என ஒரு கிராமத்தினர் சாதித்துள்ளனர்.
தென்காசி மாவட்டம், கடையநல்லூர் அருகே சேர்ந்தமரம் ஊராட்சிக்கு உட்பட்டு வேலப்பநாடாரூர் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் 2,000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள குடும்பங்களின் பிரதான தொழிலாக விவசாயம், கூலித்தொழில், பனை மரம் ஏறுதல் உள்ளிட்ட தொழில்கள் உள்ளன. இந்நிலையில், ஊரில் மையப்பகுதியான கோயிலுக்கு அருகே மக்கள் அதிகம் கூடும் பகுதியில், இரவு நேரத்தில் பெண்கள், குழந்தைகள் அச்சம் இல்லாமல் செல்ல வேண்டும் என உயர்கோபுர மின்விளக்கு வைக்க வேண்டும் எனத் திட்டமிட்டனர்.
இந்த கோரிக்கையை முன்வைத்து ஒன்று அல்ல; இரண்டு அல்ல, 15-க்கும் மேற்பட்ட அரசியல் கட்சியினரிடம் இக்கிராமத்தினர் முறையிட்டுள்ளனர். மேலும், இதற்காக மாவட்ட நிர்வாகத்திடமும் கோரிக்கை வைத்துள்ளனர். தங்கள் கோரிக்கைக்கு யாரும் செவி கொடுக்காத காரணத்தினால், தாங்களாகவே ஏன் செய்யக்கூடாது என திட்டமிட்டுள்ளனர்.
இதற்காக, வாட்ஸ்அப் குழுவில் மக்களை திரட்டியுள்ளனர். ஒவ்வொரு குடும்பமாக நிதியை திரட்டி ரூ.2.50 லட்சம் மதிப்புள்ள உயர் கோபுர மின் விளக்கை நிறுவியுள்ளனர். மேலும், மற்ற கிராமங்களும் இதேபோன்று ஒற்றுமையாக செயல்பட்டு தங்களது கிராம தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளுங்கள் எனவும் அட்வைஸ் தெரிவித்துள்ளனர்.
காலம் காலமாக அரசியல் கட்சிகளையோ அல்லது அரசையோ நம்பி பல கோரிக்கைகளை வைத்து ஏமாற்றத்தை மட்டும் எதிர்கொள்வோர்களுக்கு இந்த வேலப்பநாடாரூர் கிராமத்தினரின் ஒருங்கிணைந்து செய்த இந்த ஏற்பாடு அனைத்து கிராமத்தினருக்கும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.
இதையும் படிங்க: சமத்துவப்பொங்கல் கொண்டாடி மகிழ்ந்த சென்னை பூர்வகுடிகள்!