தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்தவர் மனோகரன் ஜெயக்குமார். இவர் சட்டப் பாதுகாப்பு சமூகத்தின் சேர்மனாக உள்ளார். மேலும் பல ஏக்கர் நிலத்தில் விவசாயமும் செய்துவருகிறார். தனது காருக்கு அனுமதிச் சீட்டு கேட்டு மாவட்ட நிர்வாகத்திடம் விண்ணப்பித்துள்ளார். ஆனால் விவசாயம் சார்ந்த பணிக்குத் தடை இல்லை என்பதால் பாஸ் தேவையில்லை எனப் பதில் அளிக்கப்பட்ட கடிதம் பெற்றுள்ளார்.
அந்தக் கடிதத்தை தனது காரின் முன்பகுதியில் ஒட்டிக்கொண்டு மனோகரன் ஜெயக்குமார், தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே கிருஷ்ணாபுரம் வழியாகக் காரில் சென்றுள்ளார். அப்போது அங்கு சோதனைச்சாவடியில் இருந்த கிராம நிர்வாக அலுவலர் மணிவண்ணன், ஜெயக்குமாரின் காரை மறித்துள்ளார்.
அப்போது தான் விவசாயம் சார்ந்த பணிக்குச் செல்வதாகவும் அதுதொடர்பாக மாவட்ட நிர்வாகம் வழங்கிய கடிதம் இருப்பதாகவும் மனோகரன் தெரிவித்துள்ளார். இருப்பினும் விவசாயம் சார்ந்த மண்வெட்டி உள்ளிட்ட பொருள்கள் வண்டியில் இல்லாததைக் காரணம் காட்டி ஜெயக்குமாரின் காரை அனுமதிக்க மணிவண்ணன் மறுத்துள்ளார். பின்னர் அவருடன் ஏற்பட்ட தகராறுக்குப் பிறகு ஜெயக்குமார் அங்கிருந்து சென்றுள்ளார்.
இதற்கிடையில், உரிய அனுமதி ஆவணம், காரணம் இருந்தும் தன்னை அனுமதிக்க மறுத்த கிராம நிர்வாக அலுவலர் மணிவண்ணன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தலைமைச் செயலருக்கு ஜெயக்குமார் புகார் அனுப்பியுள்ளார்.
அதில், "கிருஷ்ணாபுரம் சோதனைச்சாவடியில் தேவையில்லாமல் அளவுக்கு அதிகமாக பல தன்னார்வலர்களை வைத்துக்கொண்டு பணிசெய்கிறார்கள்.
அவர்களில் பலர் முகக்கவசம் அணிவதில்லை. இவர்கள் வாகன ஓட்டிகளிடம் தகாதபடி நடந்துகொள்கிறார்கள். குறிப்பாக கிராம நிர்வாக அலுவலர் மணிவண்ணன், என்னிடம் உரிய அனுமதி ஆவணம் இருந்தும் அனுமதிக்க மறுத்தார். மேலும் அவர் கையூட்டுப் பெறுகிறார். எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார். இந்தப் புகார் கடிதத்தை தென்காசி மாவட்ட ஆட்சியர் அருண் சுந்தர் தயாளனுக்கும் அனுப்பியுள்ளார்.
இதையும் படிங்க: 'தொழிலாளர் வாழ்வு ஏற்றம் பெறும்'- கமல் ஹாசன்