கரோனா தாக்கத்தை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. கடந்த எட்டு நாட்களாக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு அமலில் உள்ளதால் சாலைகள் பொதுமக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.
அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டும் பொதுமக்கள் வெளியே வந்து செல்கின்றனர். இருப்பினும் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால், ஆதரவற்றவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் பொதுமக்கள் நடமாட்டத்தை மட்டுமே நம்பி வாழக் கூடிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இவர்களின் துயரத்தைப் போக்கும் வகையில் மனிதநேயம் கொண்ட தன்னார்வலர்கள் உணவு வழங்கி உதவி செய்து வருகின்றனர்.
உலகமே கரோனாவைக் கண்டு வீட்டிற்குள் முடங்கிக் கிடக்கும் இந்த சூழலிலும் தென்காசியில் 70 வயது மூதாட்டி ஒருவர் கரோனாவைக் கண்டு தனக்கு அச்சமில்லை என்று நம்பிக்கையுடன் வழக்கம்போல் சாலையில் வலம் வருகிறார்.
அவர் பெயர் தங்கம்மாள்(70). ஆதரவற்ற இவர் சாலையில் நடமாடி, உணவு கிடைக்கும் இடங்களில் தனது பசியை போக்கி வாழ்ந்து வருகிறார்.
ஊரடங்கு மக்களுக்குதான் போல, மனம் தளராமல் ஒரே இடத்தில் முடங்கிக் கிடக்காமல் தங்கம்மாள் வழக்கம்போல் சாலையில் சுற்றித் திரிகிறார். தன்னார்வலர்கள் சிலர் அவரை கண்டு உணவு வழங்குகின்றனர்.
ஒரு பறவையை போல் நிலை இல்லாமல், தான் உறங்கும் இடம் தான் அவருக்கு வீடு. காற்றின் அலையோசையாய் ஊரை சுற்றி தன் மகிழ்ச்சியடைகிறார் தங்கம்மாள். அவரிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டன. ஆனால் அவரிடம் இருந்து வந்த பதில்கள் மனதை உறைய வைத்தன.
இதுகுறித்து தங்கம்மாள் பாட்டியிடம் பேசுகையில், ஊரெல்லாம் கடைகள் அடைக்கப்பட்டுள்ளதே உங்களுக்கு சிரமமாக இல்லையா? என்று கேட்டதற்கு, "எனக்கு என்ன சங்கடம் அதெல்லாம் ஒன்றுமில்லை, சாலையில் ஆட்கள் இல்லாவிட்டால் என்ன, கிடைக்கும் பொருட்களை சேகரித்து வாழ்கிறேன்."
நாட்டின் முக்கிய பிரச்னையான கரோனா வைரஸ் என்றால் என்ன என்று தெரியுமா? ஓ... தெரியுமே என்று பதிலளித்து ஆச்சரியப்படுத்தினார். உடனே கரோனா என்றால் என்ன என்று கேட்டதற்கு அது ஒரு நோய் என்றார்.
இது எப்படி பரவுகிறது என கேட்டதற்கு "அது ஒரு தொற்று, நோய் தொற்று மூலம் பரவுகிறது" என்று தெளிவாகவும், விவரமாகவும் பதில் அளித்தார்.
உங்களுக்கு கரோனா பயம் இருக்கா: "எனக்கு என்ன பயம் எப்படியும் சாகத்தான் போகிறோம். அதனால் பயம் ஒன்றும் இல்லை" என்று சிரித்தபடி பதிலளித்தார்.
உலகம் கரோனா பிடியில் இருந்து தப்பிக்க சுழலுகிறது. தங்கம்மாள் மூதாட்டி எந்த பயமில்லாமல், தனது அடுத்த வேலையை கவனிக்க சென்றார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் மேலும் 75 பேருக்கு கரோனா தொற்று - சுகாதாரத்துறைச் செயலாளர் தகவல்!