தமிழ்நாட்டில் தீபாவளி திருநாளை முன்னிட்டு பொதுமக்கள் பட்டாசு வெடித்தும், பலகாரம் செய்தும் பண்டிகையை கொண்டாடுவது வழக்கம். இந்த பண்டிகைக்காக பொதுமக்கள் தங்களது வீடுகளில் பலகாரம் செய்தும் சிலர் வெளியில் வாங்கி வந்தும் அவற்றை அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்களுக்கு பரிமாறுவார்கள்.
இந்நிலையில், தென்காசி மாவட்டத்தில் தீபாவளி பலகார விற்பனையானது மந்த நிலையில் நடைபெறுவதாக வியாபாரிகள் கூறுகின்றனர். பண்டிகை பலகாரங்கள் விற்பனைக்காக உணவு பாதுகாப்பு துறையில் உரிமம் பெற்று பலகார வகைகளை வீட்டிலேயே பெண்கள் கூட்டாக சேர்ந்து விற்பனை செய்தும் வருகின்றனர்.
இது குறித்து பலகார விற்பனையாளர்கள் கூறுகையில், "20 ஆண்டுகளுக்கும் மேலாக பலகார கடை நடத்தி வருகிறோம். எங்கள் கடைகளில் கை சுற்று முறுக்கு, அதிரசம், முந்திரி கொட்டை, தட்டை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட பலகார வகைகளை செய்து வருகிறோம். வழக்கமாக தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 10 முதல் 15 நாட்களுக்கு முன்னரே ஆர்டர்கள் வர தொடங்கிவிடும். தற்போது தீபாவளி வருவதற்கு சில தினங்களே உள்ள நிலையில் ஆர்டர்கள் மிக குறைவாக வருகின்றன.
கரோனா காலக்கட்டம் என்பதால் பாதுகாப்பான முறையில் பலகார வகைகள் செய்யப்பட்டு விற்பனை செய்து வருகிறோம். இந்த ஆண்டு போதுமான அளவில் விற்பனை நடைபெறவில்லை. இதேபோன்று பேக்கரியில் விற்பனை செய்யக்கூடிய லட்டு, அல்வா, மஸ்கோத் அல்வா, மைசூர்பாகு, பால்கோவா, மிக்சர் உள்ளிட்ட இனிப்பு கார வகைகளும் போதிய அளவில் ஆர்டர்கள் கிடைக்கவில்லை" என தெரிவித்தனர்.