தென்காசி: நகராட்சி பகுதியில் அமைந்துள்ள தினசரி காய்கறி சந்தை ஆறு மாதம் கழித்து திறக்கப்பட்டது. இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
தென்காசி நகராட்சி பகுதியில் அமைந்துள்ள தினசரி காய்கறி சந்தையில் 50க்கும் மேற்பட்ட கடைகள் இயங்கி வருகின்றது. மக்கள் அதிகம் கூடும் பகுதி என்பதால் கரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நகராட்சி நிர்வாகம் கடந்த ஆறு மாதத்திற்கு முன்னர் தினசரி சந்தையை மூட உத்தரவிட்டது. இதன் காரணமாக வியாபாரிகள் பாதிக்கப்படாதவாறு அவர்களுக்கு பழைய பேருந்து நிலையத்தில் இடம் ஒதுக்கப்பட்டு வியாபாரத்திற்கு அனுமதிக்கப்பட்டது.
இந்நிலையில் ஊரடங்கு உத்தரவில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டதன் அடிப்படையில் தமிழ்நாடு அரசு பேருந்துகள் இயங்க அறிவித்தது. பேருந்து நிலையத்தில் பயணிகள் வருகையும் காய்கறிகள் வாங்க வருபவர்கள் வருகையும் ஒரே இடத்தில் கூடுவதால் தகுந்த இடைவெளி கேள்விக்குறியாகும் நிலை ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து வியாபாரிகள் தினசரி சந்தையை மீண்டும் திறக்க வேண்டுமென நகராட்சி நிர்வாகத்திடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இச்சூழலில் ஆறு மாதத்திற்கு பிறகு நேற்று(செப்.29) தினசரி காய்கறி சந்தை திறக்கப்பட்டு வியாபாரிகள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: ஆறு மாதத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் முதலமைச்சர் ஆவார்: எம்.பி., கதிர் ஆனந்த்