தமிழ்நாட்டில் ஊரடங்கு உள்ள நிலையில், திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட மகளிருக்கு மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம், திருநெல்வேலி மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் 32 கிளைகள் மூலம் 67 குழுக்களுக்கு, 5 கோடி ரூபாய் கடன் வழங்கப்படும் என அமைச்சர் ராஜலட்சுமி தெரிவித்தார்.
அதன் ஒரு பகுதியாக இன்று சங்கரன்கோவிலில் கரோனா சிறப்புக் கடன் வழங்கும் திட்டத்தை அமைச்சர் ராஜலட்சுமி தொடங்கி வைத்தார்.
இதையடுத்து சங்கரன்கோவில் அரசு மருத்துவமனை வளாகத்தில் 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பேவர் பிளாக் கற்கள் அமைப்பு பணிக்கான பூமி பூஜையில் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். பின்னர், மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள் மற்றும் அதிகாரிகளுடன் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் மருந்துகளின் இருப்பு ஆகியவை குறித்து, அமைச்சர் ராஜலட்சுமி மற்றும் தென்காசி மாவட்ட ஆட்சியர் அருண் சுந்தர் தயாளன் ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.