தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகாவிற்கு உள்பட்ட ப.ரெட்டியபட்டி பகுதியில் வசித்து வருபவர், சுந்தர்ராஜன். விவசாயியான இவர், இன்று (ஜூன் 28) தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், “ரெட்டியபட்டி கிராமமானது வானம் பார்த்த பூமி. இந்தப் பகுதியில் வாழை விவசாயம் செய்வதற்குப் போதிய தண்ணீரும் இல்லை. கால்வாய் பாசனமும் கிடையாது.
ஆனால், எங்கள் ஊரில் 98 நபர்கள் வாழை போட்டு விவசாயம் செய்ததாகக் கூறி, ரூ.2,01,32,500 கடன் பெற்றுள்ளனர். அந்த கடனும் விவசாயிகள் கடன் தள்ளுபடி திட்டத்தின் கீழ் தற்போது தள்ளுபடி ஆகியுள்ளது.
இந்நிலையில், வெளியூர் நபர்களை முகவரி மாற்றம் செய்து வாழை விவசாயம் செய்யாமலேயே, விவசாயம் செய்ததாகக் கூறி கடன் வழங்கிய கூட்டுறவு சங்கச்செயலாளர் பழனிவேல் மீது புகார் கொடுக்கப்பட்டது.
இந்தப் புகாரின்பேரில், விசாரணை செய்ய 2 கள அலுவலர்கள் நியமிக்கப்பட்டு விசாரணையைத் தொடங்கினர். அந்த விசாரணையானது கள அலுவலர்கள் முத்துராஜ் மற்றும் மோகன் ஆகியோர்கள் தலைமையில் நடைபெற்றது. ஆனால், அவர்கள் பணம் பெற்றுக்கொண்டு ஒரு தலைபட்சமாக செயல்பட்டு போலி விசாரணை அறிக்கை சமர்பித்ததாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக மேலும் ஒரு புகார் அளிக்கப்பட்ட நிலையில், கூட்டுறவு சங்கத்தில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்த மேலும் இரு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தற்போது ஒட்டுமொத்த முறைகேடுகள் குறித்து விசாரணை நடைபெற்றுவரும் நிலையில், கூட்டுறவு சங்கத்தின் செயலாளராகப் பணிபுரியும் பழனிவேல் என்பவருக்கு விசாரணை முடியும் வரை எவ்வித ஓய்வு மற்றும் விருப்ப ஓய்வு வழங்கக் கூடாது.
ஒரு தலைப்பட்சமாக செயல்பட்டு போலி அறிக்கை தாக்கல் செய்த அலுவலர்கள் முத்துராஜ் மற்றும் மோகன் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இம்மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர், மனு மீது உரிய முறையில் விசாரணை நடத்தப்படும் என உறுதி அளித்துள்ளார்.
இதையும் படிங்க: ஸ்ரீரங்கத்தில் பல்லி விழுந்த பழச்சாற்றை அருந்தியவர் மருத்துவமனையில் சிகிச்சை - கடையில் ரெய்டுவிட்ட அலுவலர்கள்