தென்காசி: மகாராஷ்டிரா மாநிலத்தில் பணிபுரியும் ராணுவ வீரர் மகாலிங்கம் தனது சொந்த ஊரான தென்காசி மாவட்டம் சிவகிரிக்கு ஒரு வார விடுமுறைக்கு வந்த நிலையில் இன்று (நவ.3) மின்னல் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாகக் கன மழை பெய்து வருகிறது. மேலும், தென்காசி மாவட்டம் மட்டும் அல்லாமல் அதன் சுற்றியுள்ள சங்கரன்கோவில், சிவகிரி, ஆலங்குளம், கடையம் உள்ளிட்ட பல பகுதிகளிலும் கன மழை பெய்து வருகிறது.
தென்காசி மாவட்டம் முழுவதும் பெய்து வரும் கன மழையின் காரணமாகப் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் ஒரு சில இடங்களில் பாதிப்புகளும் ஏற்பட்டுள்ளது. தொடர் கனமழையின் காரணமாகக் குற்றாலத்திலுள்ள மெயின் அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க இரண்டு நாட்களுக்கு மேலாகத் தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இன்று (நவ.3) காலையிலிருந்தே இடியுடன் கூடிய கனமழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மேலும் தென்காசி மாவட்டம் முழுவதும் கன மழை பெய்து வருவதால் மாவட்ட ஆட்சியர் துரை ரவிச்சந்திரன் நாளை (நவ.4) பள்ளிகளுக்கு விடுமுறை அளித்துள்ளார்.
தென்காசி மாவட்டம் சிவகிரி பகுதியில் வசித்து வரும் மகாலிங்கம் என்பவர் மகாராஷ்டிரா ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். மேலும் இவர் ஒரு வாரத்திற்கு விடுமுறை எடுத்து தனது சொந்த ஊரான தேவிபட்டினம் கிராமத்திற்கு வந்துள்ளார். தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் தனது விவசாய நிலத்தை விவசாயத்திற்குத் தயார் செய்வதற்காக இரண்டு நாட்களாக நிலத்தில் வேலை செய்து வந்துள்ளார்.
இன்று (நவ.3) காலை முதல் மகாலிங்கம் தனது விவசாய நிலத்தில் மழையிலும் வேலை செய்து வந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக மின்னல் தாக்கியதில் மகாலிங்கம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் ராணுவ வீரர் மகாலிங்கத்தின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காகத் தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ராணுவ வீரர் மகாலிங்கத்திற்குத் திருமணமாகி ஒரு வயதில் குழந்தை உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் விடுமுறைக்குச் சொந்த ஊருக்கு வந்த நிலையில் மின்னல் தாக்கி ராணுவ வீரர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: தமிழகத்திற்கு காவிரியில் 2600 கன அடி தண்ணீர் திறக்க வேண்டும்: கர்நாடக அரசுக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவு!