சிவகங்கை மக்களவைத் தொகுதியில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் கவிஞர் சிநேகன் போட்டியிடுகின்றார். அவர் நமது ஈடிவி பாரத் செய்திக்கு ( E tv bharat) சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசுகையில், ”சிவகங்கை ஒரு வரலாற்று சிறப்புமிக்க ஊர். வீரத்தை உலகிற்கு எடுத்து சொன்ன பூமி. டிஜிட்டல் இந்தியாவை பிறகு பார்த்துக்கொள்ளலாம். முதலில் எங்கள் நிலத்தில் ஊறிய தண்ணீரை நாங்கள் எடுத்துக் குடிக்க அதிகாரத்தை கொடுங்கள். நெல், கரும்பு, காய்கறிகள் விளைந்த பூமியில் இப்போது கருவேல மரம் முளைத்திருக்கிறது. அதை வெட்டிவிட்டு விவசாயம் செய்ய வழிவிடுங்கள்.
விவசாயிகளின் அன்றாட பிரச்னைகளை முன்வைத்துதான் வாக்கு கேட்கின்றோம். மற்ற அரசியல்வாதிகள் போல் 24 மணிநேரத்தில் சிவகங்கையை தங்க தொகுதியாக மாற்றுவோம் என்று பொய் சொல்லி ஓட்டுகேட்கவில்லை. நாற்பது வருட அழுக்கை கொஞ்சம் கொஞ்சமாகத்தான் சலவை செய்ய வேண்டும். அந்த நம்பிக்கை எங்களிடம் உள்ளது” என்றார்.
கிராமங்களுக்கான திட்டங்கள் குறித்த கேள்விக்கு பதிலளித்த சிநேகன், ”நானும் கிராமத்துக்காரன், விவசாயி. பரப்புரையின்போது நான் பார்த்து வளர்ந்த பெரியவர்களைத்தான் பார்த்தேன். மேல்சட்டை போடாத பெரியவர்களை பார்க்கும்போது எனது தந்தையின் ஞாபகம் வருகிறது. எனது அப்பாவுக்கு செய்யாததை இங்கு உள்ள அப்பாக்களுக்கு செய்ய ஆசைப்படுகிறேன்” என்றார்.