சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ளது மேலாயூர் கிராமம். இந்தக் கிராமத்தில் 1954ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட திண்ணைப் பள்ளி படிப்படியாக உயர்ந்து தற்போது நடுநிலைப் பள்ளியாக செயல்பட்டு வருகிறது. ஆங்கில மோகத்தால் மாணவர்களின் பெற்றோர்கள் தனியார் பள்ளியை நோக்கி செல்வதாக கூறப்படுகிறது. இதனால், இப்பள்ளியில் மாணவர் சேர்க்கை வெகுவாக குறைந்தது.
இந்நிலையில், பள்ளியின் தலைமை ஆசிரியர் டேவிட் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த முன்னாள் மாணவன் மணிகண்டனை தொடர்பு கொண்டு முகநூல் மூலம முன்னாள் மாணவர்களை ஒன்று சேர்த்துள்ளார்.
இதனையடுத்து, மாணவர்கள் இப்பள்ளிக்கு உதவி செய்ய முன்வந்துள்ளனர். தலைமை ஆசிரியர் டேவிட் வருகைக்கு முன்பு வெறும் காடாக இருந்த பள்ளி தற்போது மரங்கள் நிறைந்த சோலைவனமாக மாறியுள்ளது. முன்னாள் மாணவர்கள் மணிகண்டன் மூலம் இப்பள்ளிக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், ஸ்மார்ட் வகுப்பறைக்கு தேவையான கணினிகள், டிவி, விளையாட்டு பொருட்கள் ஆகியவற்றை அன்பளிப்பாக அளித்து தனியார் பள்ளிக்கு இணையாக இப்பள்ளியை மாற்றியமைத்துள்ளனர்.
மேலும், பள்ளியின் சுவரொட்டியில் மாணவர்களை கவரும் பொன்மொழிகள், ஓவியங்கள் வரைந்து அசத்தியுள்ளனர். இதனால், கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை 30 விழுக்காடு அதிகரித்துள்ளதாக முன்னாள் மாணவர் மணிகண்டன் தெரிவித்துள்ளார்.
கடந்த ஒருவருடமாக பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகள் அதிகரித்துள்ளதால் பொதுமக்களின் கவனம் பள்ளியின் மீது ஏற்படும் வண்ணம் முன்னாள் மாணவர் குழு செயல்பட்டு வருகிறது. மேலும், மணிகண்டனை போன்று அனைத்து அரசுப் பள்ளிகளிலும் முன்னாள் மாணவர்கள் முயற்சி செய்தால் அரசுப் பள்ளிகள் மூடப்படும் நிலையில் இருந்து மீட்டெடுக்கலாம் பொதுமக்கள் கூறி வருகின்றனர்.