சிவகங்கை அடுத்துள்ள உடைகுளம் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான பீர் மூலப்பொருள் தயாரிக்கும் தொழிற்சாலை கடந்த 10 வருடங்களாக செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் புகையால் கிராம மக்கள் பாதிக்கப்படுவதாகவும் தொழிற்சாலையினுள் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணறுகளால் நீர்வள ஆதாரம் மாசுபடுவதாகவும் கூறி, கிராமத்தை சேர்ந்த மக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்று இந்த தொழிற்சாலைக்கு பீர் தயாரிக்க மூலப்பொருளாக விளங்கும் மொலாசிஸ் எனும் திரவப் பொருளை ஏற்றி வந்த 4 டேங்கர் லாரிகளை கிராமத்தை சேர்ந்த 10-க்கும் மேற்பட்டோர் இணைந்து சிறைபிடித்தனர். ஆறு மணி நேரத்திற்கும் மேலாக சிறைபிடிக்கப்பட்ட லாரிகளை மீட்க தொழிற்சாலை நிர்வாகமும், காவல்துறையினரும் வராத சூழ்நிலையில் லாரி ஓட்டுநர்கள் செய்வதறியாது தவித்து வருகின்றனர்.