சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே வனத் துறையினர் நேற்று சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த நபரை தடுத்த நிறத்த முயன்றபோது தப்பியோடினார். இதில் தப்பியோடியவர் தனது இருசக்கர வாகனத்தையும், தான் வைத்திருந்த பையையும் அரண்மனை சிறுவயல் என்ற இடத்தில் விட்டுவிட்டுச் சென்றார்.
அந்தப் பகுதியில் வனத் துறையினர் வந்து பார்த்தபோது அங்கிருந்த பையில் மயில்கள் இறந்த நிலையில் இருந்ததைக் கண்டு தப்பியோடிய நபரை தேடிவந்தனர். இந்நிலையில், வனச்சரக அலுவலர் கோபிநாத் தலைமையிலான அலுவலர்கள் நடத்திய விசாரணையில் தப்பியோடிய நபரை மேலூர் அருகே உள்ள வேலாயுதம்பட்டியில் கைது செய்தனர்.
அவரிடமிருந்து ஒரு நாட்டுத் துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். மேலும், விசாரணையில் அவர் பெயர் விஜயகுமார் என்பதும், இறைச்சிக்காக மயில்களை வேட்டையாடியதும் தெரியவந்தது. இதையடுத்து விஜயகுமார் சிவகங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.