சிவகங்கை மாவட்டம் திருபுவனம் அருகே உள்ள கீழடியில் கடந்த 2014ஆம் ஆண்டு முதல் இந்திய தொல்லியல்துறை சார்பில் மூன்றுகட்ட அகழாய்வு பணிகள் செய்யப்பட்டது. இதில் சுமார் ஏழாயிரத்திற்கும் மேற்பட்ட பண்டைய தமிழர்களின் நாகரிகத்தை விளக்கும் விதமாக மணிகள், தந்தத்திலான பொருட்கள், பண்டைய தமிழர்களின் கட்டிட அமைப்புகள் கிடைக்கப்பெற்றன. இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு தொல்லியல்துறை சார்பில் நான்காம் கட்ட அகழாய்வு பணி மேற்கொள்ளப்பட்டது. இதில் தங்கத்திலான அணிகலன்கள், பவள மணிகள் என பல பொருட்கள் கிடைக்கப்பெற்றன.
இந்நிலையில், ஜூன் 13ஆம் தேதி தமிழ் வளர்ச்சி, தொல்லியல்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஐந்தாம் கட்ட அகழாய்வு பணிகளை தொடக்கி வைத்தார். இந்த பணிகளை தமிழ்நாடு தொல்லியல் துறை காப்பாட்சியர் பிரபாகரன் தலைமையில் 30க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பணிகள் தொடங்கப்பட்டு ஒருவார காலமே ஆன நிலையில் அங்குள்ள நான்கு அகழாய்வு குழிகளில் ஆய்வுப்பணியின்போது ஏராளமான பண்டைய கால ஓடுகளும், பானைகளும் கிடைக்கப்பெற்றுள்ளன.