சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்று முடிந்த 7ஆம் கட்ட அகழாய்வுப் பணியை தமிழ்ப் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று (அக். 19) ஆய்வுமேற்கொண்டார். அப்போது அவர் அகழாய்வு குழிக்குள் இறங்கி அகழாய்வில் கிடைக்கப்பெற்ற தொன்மையான பொருள்களைப் பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளரிடம் பேசிய அமைச்சர், "கீழடி 7ஆம் கட்ட அகழாய்விற்காகத் தோண்டப்பட்ட குழிகளை மூடாமல் அனைத்து நாள்களும் பொதுமக்களின் பார்வைக்காக திறந்தவெளி அருங்காட்சியமாக மாற்றப்படும். அகழாய்வு குழிகளை திறந்தவெளி அருங்காட்சியகமாக மாற்றுவது தமிழ்நாட்டில் இதுவே முதல்முறை.
இக்குழிகளில் உள்ள கட்டமைப்புகள் செங்கல் கட்டுமானங்களை திறந்தவெளியில் பாதுகாக்கும் வகையில் தொழில்நுட்ப வசதிகளை மேற்கொள்ள சென்னை ஐஐடியின் உதவியை நாட உள்ளோம்.
8ஆம் கட்ட அகழாய்வுப் பணிகள் குறித்து இன்னும் முடிவு எடுக்கவில்லை. முடிவுசெய்த பின்னர் முறையாக அறிவிக்கப்படும். தற்போது நடைபெற்ற 7ஆம் கட்ட அகழாய்வில் முதல்முறையாக மீன் சின்னம் பொறிக்கப்பட்ட சுடுமண் உறைகிணறு கிடைத்துள்ளது. அதேபோன்று முத்திரை நாணயங்களும் கிடைக்கப்பெற்றுள்ளன. கங்கை சமவெளியோடு வணிகத் தொடர்பு இருந்ததை உணர முடிகிறது" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: தமிழர்களுக்கு யாரும் பாடம் நடத்த வேண்டிய அவசியமில்லை - கனிமொழி