சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே எஸ்.புதூரில் வசித்து வருபவர் சின்னம்மாள் (65). இவர் நேற்று (ஏப். 30) மாலை தனது வீட்டின் முன்புறம் அமர்ந்து ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 25 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத இளைஞர் மூதாட்டியிடம் பேச்சு கொடுத்துள்ளார்.
மூதாட்டியின் மகன் சமையல் சிலிண்டர் புத்தகத்தை வாங்கி வர சொன்னதாக கூறியுள்ளார். இதனால் மூதாட்டி சின்னம்மாள் வீட்டிற்குள் சிலிண்டர் புத்தகத்தை எடுக்கச் சென்றுள்ளார். அப்போது மூதாட்டியை பின் தொடர்ந்து வாலிபரும் வீட்டிற்குள் நுழைந்துள்ளார். பின்னர் மூதாட்டி கழுத்தில் அணிந்திருந்த ஆறு பவுன் எடை உடைய இரண்டு தங்க சங்கிலிகளை இளைஞர் பறித்துள்ளார்.
மேலும் மூதாட்டி காதில் அணிந்திருந்த தண்டட்டியை அவிழ்க்க முடியாததால், அவற்றை காதோடு அறுத்து இளைஞன் கைப்பற்ற முயன்றுள்ளான். இதனால் மூதாட்டி வலி தாங்க முடியாமல் அலறியுள்ளார். இதன் காரணமாக பயந்து போன திருடன் தண்டட்டியை அதே இடத்தில் போட்டுவிட்டு தப்பியோடியுள்ளான்.
அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அடையாளம் தெரியாத இளைஞரை தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க : பெருந்தொற்றை எதிர்கொள்ள தேசிய அளவிலான கொள்கை தேவை - சோனியா காந்தி