சிவகங்கை: மானாமதுரை அருகே உள்ள சந்திரனேந்தல் கிராமத்திற்கு சொந்தமாக சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் கண்மாய் உள்ளது. இப்பகுதியில் விவசாய அறுவடை முடிந்த பிறகு மக்கள் மீன்பிடி திருவிழா கொண்டாடுவது வழக்கம். விவசாயம் செழித்து தற்போது நெற்பயிர்கள் அனைத்தும் அறுவடை செய்துவிட்ட நிலையில், இந்த கிராம மக்கள் 3 ஆண்டுகளுக்கு பிறகு மீன்பிடித் திருவிழாவை நடத்திட முடிவு செய்தனர்.
அதனை தொடர்ந்து கிராமத்தின் முக்கியஸ்தர்கள் மீன்பிடி திருவிழாவைத் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். அப்போது கண்மாய் கரையில் தயாராக காத்திருந்த பொதுமக்கள் ஒரே நேரத்தில் கண்மாய்க்குள் இறங்கினர். சிறியவர் முதல் பெரியவர் வரை போட்டி போட்டுக் கொண்டு மீன்களை அள்ளினர்.
சிறிய மீன் முதல் 2 கிலோ வரை எடை கொண்ட மீன்கள் வரை பிடிக்கப்பட்டது. அதில் கெண்டை, கட்லா, உளுவை, விரால் என பல வகையான மீன்கள் கிடைத்தது. மூன்று வருடங்களுக்கு பிறகு களைகட்டிய இந்த மீன்பிடி திருவிழாவால் அந்த பகுதி கிராமங்களில் உள்ள வீடுகளில் மீன் குழம்பு வாசனை கமகமத்தது.