Child Rights and You (CRY) எனப்படும் குழந்தை உரிமைகள் அமைப்பு வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த ஆண்டு மே மாதம் 318 குழந்தைத் திருமண வழக்குகள் பதிவாகி இருந்தன. பொதுவாக மே மாதத்தில் அதிக சுபமுகூர்த்த தேதிகள் உள்ளன. இந்நிலையில் இந்த ஆண்டும் ஊரடங்கு காரணமாக குழந்தைகள் பள்ளிகளுக்கு செல்ல இயலாத சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், இந்த விகிதம் மிகவும் அதிகரித்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இந்நிறுவனத்தின் கணக்கெடுப்பின்படி, சேலத்தில் 2019ஆம் ஆண்டு மே மாதத்தில் 60 குழந்தை திருமணங்கள் நடந்தேறியுள்ளன. இந்த எண்ணிக்கை 2020ஆம் ஆண்டு மே மாதத்தில் 98 ஆக உயர்ந்தது. 2019ஆம் ஆண்டில் சுமார் 150 வழக்குகள் பதிவான நிலையில், 2020ஆம் ஆண்டு மே மாதத்தில் 192 வழக்குகள் பதிவாகியுள்ளன.
இவ்வாறு, சேலம், தர்மபுரி, ராமநாதபுரம், திண்டுக்கல் (கொடைக்கானல்) ஆகிய மாவட்டங்களில் சென்ற ஆண்டே குழந்தைத் திருமண விகிதம் அச்சம் தரும் வகையில் அதிகரித்திருந்த நிலையில், இந்த ஆண்டும் அது தொடரலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
“கரோனா பரவல் காரணமாக, தகவல்களைச் சேகரிப்பது போராட்டமாக உள்ளது. இந்தக் குறிப்பிட்ட மாவட்டங்களின் எண்ணிக்கை கவலை அளிக்கிறது. நாம் கவனமாக இருக்க வேண்டும். கரோனா காரணமாக பெரும்பாலான கல்வி மையங்கள் மூடப்பட்டுள்ளன. கல்வி இல்லாமல், நலிந்த குடும்பங்களும், ஆணாதிக்க மனப்பான்மை காரணமாகவும் குழந்தைகள் உரிமை மீறல் மிகவும் பரவலாகிவிட்டது” என்று அந்நிறுவனத்தின் மேலாளர் ஜான் ராபர்ட்ஸ் வருத்தம் தெரிவித்துள்ளார்.