சேலம் மாவட்டத்தில் மே 7ஆம் தேதி இரவு மதுபோதையில் இருந்த மூவர், பெருந்தலைவர் காமராஜர் சிலையை அவமதித்தனர். இது தொடர்பாக கருப்பூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.
இந்த நிலையில், தேக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சுகவனேஸ்வரர், அரவிந்த், வெற்றிவேல் ஆகிய மூவர் சந்தேகத்தின் பேரில் கருப்பூர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதில், மூவரும் கடந்த 2015ஆம் ஆண்டு தேக்கம்பட்டியில் நடைபெற்ற மாரியம்மன் கோயில் திருவிழாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் மீது தாக்குதல் நடத்திய விவகாரத்தில், சூரமங்கலம் காவல் நிலையத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதும் நீதிமன்ற விசாரணை நடைபெற்று வருவதும் தெரியவந்தது.
இதையடுத்து, அவர்களிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் மூவர் மீதும் தொடர் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டதாகவும் வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்தது. இதனிடையே, கருப்பூர் காவல்துறையினர், சேலம் மாநகர காவல் துணை ஆணையாளர் தங்கதுரை ஆகியோரின் பரிந்துரையின் பேரில் காமராஜர் சிலையை அவமதித்த வழக்கில் மூவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய சேலம் மாநகர காவல் ஆணையாளர் செந்தில்குமார் உத்தரவிட்டார்.
பின்னர், மூவரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதையும் படிங்க: இருசக்கர வாகன விபத்து: பெண் ஒருவர் உயிரிழப்பு!