மத்திய அரசு பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து ஆவணங்களின்றி அகதிகளாக இந்தியாவிற்கு வரும் இந்துக்கள், கிறிஸ்தவர்கள் , சீக்கியர்கள் , பார்சிகள், ஜெயின் மதத்தினர் , பௌத்த மதத்தினர் ஆகியோருக்கு மட்டும் குடியுரிமை வழங்கும் மசோதாவை அண்மையில் நிறைவேற்றியது.
இந்த மசோதா நிறைவேற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டின் பல மாநிலங்களில் அரசியல் இயக்கத்தினர் மற்றும் இஸ்லாமிய அமைப்பினர் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், சேலம் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள தலைமை தபால் நிலையம் எதிரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் சார்பில் மத்திய அரசின் குடியுரிமை மசோதாவை கண்டித்தும் அதை வாபஸ் பெற வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு மத்திய அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சேலம் மாவட்ட தவ்ஹீத் ஜமாத் மாநில மேலாண்மை குழு உறுப்பினர் அப்துல் ரஹீம், "தேசிய குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்திருப்பது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது. மத அடிப்படையில் மக்களை பிளவுபடுத்தக்கூடாது என அம்பேத்கர் எழுதிய அரசியல் சாசனம் அறிவுறுத்தியுள்ளது. இதில் இஸ்லாமியர்களுக்கும், இலங்கை தமிழர்களுக்கும் குடியுரிமை மறுக்கப்பட்டிருப்பது நியாயமல்ல.
மத்திய அரசின் இது போன்ற ஒடுக்குமுறை நடவடிக்கைகளை கைவிட வேண்டும். கடைசி இஸ்லாமியர் இருக்கும்வரை இந்தக் குடியுரிமை சட்டத்தை நாங்கள் எதிர்ப்போம்" என்றார்.
இதையும் படிங்க: கலாஷேத்ரா முன்னாள் தலைவர் லீலா சாம்சன் மீது சிபிஐ வழக்குப்பதிவு