சேலம் மாவட்டம் மேட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் சபரி அபிஷேக். பட்டதாரி இளைஞரான இவர் கல்லூரி மாணவிகளை காதலிப்பது போல் ஏமாற்றி அவர்களிடம் ஆசைவார்த்தை கூறி நட்சத்திர விடுதிகள், வெளியூர்களுக்கு அழைத்துச் சென்று பாலியல் வல்லுறவில் ஈடுபட்டுவந்துள்ளார்.
அதனை தனது செல்ஃபோனில் காணொலியாக பதிவு செய்து அவர்களிடம் பணம் கேட்டு மிரட்டியதோடு அவர்களை தன் பாலியல் இச்சைக்காக பலமுறை பயன்படுத்திக் கொண்டுள்ளார்.
இவரிடம் சிக்கிக்கொண்ட ஒரு பெண்ணை சந்திப்பதற்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை சேலம் திருவகவுண்டனூர் பகுதிக்கு சபரி அபிஷேக் வந்துள்ளார். அப்போது அப்பெண்ணை பின்தொடர்ந்து சென்ற அவரது பெற்றோர் சபரி அபிஷேக்கை கையும் களவுமாக பிடித்து கண்டித்துள்ளனர்.
இதனிடையே அங்கு காவல் பணியிலிருந்த காவலர் ஒருவர் அவர்களிடம் விசாரணையில் ஈடுபட்டுள்ளார். அப்போது சபரி அபிஷேக் தன்னை ஏமாற்றி விட்டதாகவும் அவரிடம் தன்னுடைய அந்தரங்க காணொலி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான சேலம் மாநகர காவல் ஆணையர் செந்தில்குமாருக்கு புகார் தெரிவிக்கப்பட்டதையடுத்து, தனிப்படை அமைக்கப்பட்டு அந்த இளைஞரை கைது செய்தனர்.
அதன்பின் அவரின் செல்ஃபோனை காவல் துறையினர் ஆய்வு செய்ததில், அதில் பல பெண்களுடைய ஆபாச படங்களும் கட்டாயப்படுத்தி பாலியல் வல்லுறவு செய்த காணொலிகளும் இருந்தது உறுதி செய்யப்பட்டது.
தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் சேலம் மட்டுமல்லாமல் பல பகுதிகளுக்கும் சென்று இதுபோன்று பெண்களை பாலியல் வல்லுறவில் ஈடுபட்டதும் அவர்களிடம் பணம் கேட்டு மிரட்டியதும் வாக்கு மூலத்தில் அவர் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து அவரின் செல்ஃபோனில் இருக்கக்கூடிய காணொலிகளை தீவிரமாக ஆராய்ந்து பல்வேறு கோணங்களில் விசாரணை செய்யப்பட்டது. அதன்பின் அவர் சேலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.