கரோனா அச்சத்தால் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், சேலம் சின்னக்கடை வீதி பகுதியில் ஊரடங்கை மீறி வேலுமணி என்பவர் எலுமிச்சை விற்பனை கடையை நடத்திவந்துள்ளார். கடையை மூட பலமுறை சேலம் டவுன் காவல் துறையினர் வலியுறுத்தியும் வேலுமணி கடையை மூடாமல் திறந்து வைத்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து அவரைக் காவல் துறையினர் கைதுசெய்து காவல் நிலையம் அழைத்துச் சென்றுள்ளனர். இத்தகவலை அறிந்த வேலுமணியின் தாயார் பாலாமணி, மகனை விடுவிக்குமாறு காவல் துறையினரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். அதற்கு காவல் துறையினர் மறுப்பு தெரிவித்த சிறிது நேரத்திற்குள் பாலாமணி காவல் நிலையத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
பல்வேறு மனித உரிமை அமைப்புகள் தாமாக முன்வந்து மூதாட்டி பாலாமணி உயிரிழந்தது தொடர்பாக விசாரித்து வந்தன. இதுதொடர்பாக சேலம் டவுன் காவல் துறையினர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என பாலாமணியின் மகன், அவரது உறவினர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இருப்பினும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இந்தச் சூழலில், இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட பாலாமணியின் உறவினர்கள், மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளனர்.
இதன்பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், ”டவுன் போலீஸ்தான் பாலாமணியின் மரணத்திற்கு காரணம். ஆய்வாளர் குமார் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும். மனித உரிமைகள் ஆணையத்தில் இதுகுறித்த தகவலை நாங்கள் அளித்திருக்கிறோம். இந்த விவகாரத்தில் ஆட்சியர் தலையிட வேண்டும். ஆணையர் அலுவலகத்திலும் புகார் அளித்துள்ளோம். ஆனால், நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. எங்களைப் போலீசார் மிரட்டி வருகின்றனர். பாலாமணியின் மரணத்திற்கு நீதி கிடைக்கும்வரை போராட்டம் தொடரும்" என்றார்.
இதையும் படிங்க: ’பழ வியாபாரியிடம் லஞ்சம் வாங்கவில்லை’ - விளக்கமளிக்கும் காவல்துறை