சேலத்தில் வசித்து வரும் ரவுடி கதிர்வேல் மீது கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட பல குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், சேலம் மாவட்டம் காரிப்பட்டி பகுதியில் ரவுடி கதிர்வேல் இன்று காவல்துறையினரால் என்கவுண்ட்டர் செய்யப்பட்டார்.
இதனையடுத்து என்கவுண்டர் செய்யப்பட்ட ரவுடி கதிர்வேலின் உடல் சேலம் அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வுக்காக அனுப்பப்பட்டது. அவரது உடலை வாங்க மாட்டோம் என்று கூறி அவரது உறவினர்கள் சேலம் அரசு மருத்துவமனையில் முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது.
ரவுடி கதிர்வேலை உள்நோக்கத்தோடு காவல்துறையினர் என்கவுண்ட்டர் செய்துள்ளனர் என்றும் உண்மை தெரியும் வரை உடலை வாங்க மாட்டோம் எனவும் மருத்துவமனையை அவரது உறவினர்கள் முற்றுகையிட்டனர்.
இதனையடுத்து அங்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபா கணிகர், என்கவுண்டர் சம்பவத்தின்போது காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் காவல் துறையினரை நேரில் சந்தித்து அவர்களிடம் விசாரணை நடத்தினார்.
பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர் , "என்கவுண்டர் சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. நீதிமன்ற விசாரணை தொடங்கி உள்ளது. விசாரணைக்குப் பிறகு முழு உண்மைகள் வெளிவரும்", என்றார்.
மேலும், ரவுடி கதிர்வேலின் என்கவுண்டர் சம்பவம் சேலம் மாவட்டம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.