சேலம் மாவட்ட ஒருங்கிணைந்த மணல் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் சேலம் மாவட்ட ஒருங்கிணைந்த மணல் லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் எஸ்.பி.செல்வராஜ், மாவட்டச் செயலாளர் எம். கண்ணையன் உள்ளிட்ட சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
அப்போது சேலம் மாவட்ட ஒருங்கிணைந்த மணல் லாரி உரிமையாளர்கள் சங்க மாவட்டச் செயலாளர் கண்ணையன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில், தமிழ்நாட்டில் 30 லட்சத்திற்கும் மேல் கட்டுமான தொழிலில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். கடந்த இரண்டு ஆண்டு காலமாக ஆன்லைன் மணல் விற்பனை நடைமுறையில் உள்ளதாலும், காவிரி ஆற்று பகுதிகளில் மணல் எடுக்க தடை உத்தரவு நடைமுறையில் இருப்பதாலும் மிகுந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
மேலும், மணல் விற்பனை தொடர்பான அனைத்து பொதுநல வழக்குகளையும் விரைந்து முடித்து, மணல் குவாரிகளில் இருந்து தரமான மணல் எடுத்து விற்பனை செய்ய தமிழ்நாடு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.