சேலம் மாநகர பகுதிகளில் காலை முதலே வெயிலின் தாக்கம் கடுமையாக பொதுமக்களை வாட்டி வதைத்தது. தொடர்ந்து மாலையில் திடீரென பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யத் தொடங்கியது. 4 ரோடு, பெரமனூர், ராமகிருஷ்ணா சாலை, புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், மரவனேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் மாநகரின் பிரதான சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் சிரமத்திற்குள்ளாகினர்.
மேலும் நான்கு ரோடு அருகே பெரமனூர் பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் மழைநீர் புகுந்தது. அப்பகுதியில் உள்ள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் மழைநீர் வெளியேற வழியின்றி குடியிருப்பு பகுதிகளுக்குள் குளம் போல் தேங்கி நின்றது. அந்த நீரில் அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் காகிதக்கப்பலை விட்டு மாநாகராட்சி நிர்வாகத்திற்கு நூதன முறையில் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.
மேலும் குடியிருப்பு பகுதியில் மழைநீர் தேங்கி நிற்பதற்கு மாநகராட்சி நிர்வாகத்தின் அலட்சியம்தான் காரணம் எனவும், இனி மழைக்காலம் என்பதால் இப்பகுதியில் மழைநீர் தேங்கி நிற்காத வகையில் சாக்கடைகளை தூர்வார மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: மலையை அழகாக்கிய வானவில் காட்சி - கண்டு ரசித்த மக்கள்!