சேலம்: மாநகரில் 'சேலம் சீர்மிகு நகரம்' திட்டத்தின் கீழ் பல்வேறு பகுதிகளில் கழிவுநீர் மற்றும் மழை நீர் வடிகால்வாய் முறையான திட்டமிடல் இல்லாமல் அமைக்கப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். சிவதாபுரம், பனங்காடு உள்ளிட்ட பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சாலையின் இருபுறமும் கழிவுநீர் கால்வாய் மற்றும் மழைநீர் வடிகால்வாய் கட்டப்பட்டு வருகிறது.
இந்த கால்வாய்களின் நடுவில் உள்ள மின் கம்பங்கள் அகற்றப்படாமல் அப்படியே உள்ள நிலையில் கால்வாய் கட்டுமானம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் காரணமாக கழிவு நீர் செல்வதில் தடை ஏற்பட்டு குப்பை கழிவுகள் அடைப்பு ஏற்பட்டு , கழிவு நீர் தேங்கி நிற்கிற அவலம் ஏற்பட்டுள்ளது.
தேங்கி நிற்கும் கழிவு நீரில் அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு உள்ளிட்ட நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக சேலம் மாநகராட்சி 22வது வார்டுக்கு உட்பட்ட சிவதாபுரம் மற்றும் அதனைச் சுற்றி உள்ள பகுதிகளில் சாலையோரம் அமைக்கப்படும் மழை நீர் மற்றும் கழிவு நீர் வடிகால் வசதிகள் முறையான திட்டமிடுதலோடு அமைக்கப்பட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக சிவதாபுரம் பகுதியைச் சேர்ந்த மோகன் என்பவர் கூறுகையில், 'சிவதாபுரம் பகுதியில் மழை நீர் வடிகால்வாய் மற்றும் கழிவுநீர் வடிகால் முறையாக அமைக்கப்படவில்லை. எங்கள் பகுதியில் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் அளவுக்கு கழிவு நீர் வசதி வடிகால்வாய் வசதி செய்து தரப்படவில்லை.
கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக கோரிக்கை விடுத்தும் அரசு நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ள எங்கள் பகுதியில் கழிவுநீர் வீட்டிற்கு வெளியே தேங்கி நிற்கிறது. இதனால் கொசுக்களின் உற்பத்தி அதிகரித்து பலருக்கும் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. உடனடியாக மாநகராட்சி நிர்வாகம் இதனை சீர் செய்து தர வேண்டும் என்று' கோரிக்கை கொடுத்துள்ளார்.
இதையும் படிங்க: கோவை கார் சிலிண்டர் வெடிப்பில் சிக்கிய நபருக்கு பாஜக பயிற்சி ? சபாநாயகர் பரபரப்பு பேட்டி