சேலம் மாவட்டம் கருப்பூர் பகுதியில் பெரியார் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இங்கு முதுகலை, ஆராய்ச்சி படிப்புகளில் 100க்கும் மேற்பட்ட மாணவியர் பயின்று வருகின்றனர். இந்நிலையில், பெரியார் பல்கலைக்கழக பதிவாளரிடம் முதுநிலை அறிவியல் பட்ட மேற்படிப்பு படிக்கும் மாணவி ஒருவர் பேராசிரியர் மீது பாலியல் புகார் கொடுத்துள்ளார்.
இது குறித்து பல்கலைக்கழக பதிவாளர் தலைமையில் விசாரணை நடைபெற்றது. அதில், பெரியார் பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு முதுகலை தாவரவியல் பட்ட மேற்படிப்பு படிக்கும் மாணவி ஒருவர், சில நாள்களுக்கு முன்பு பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள லிப்டில் ஏறியிருக்கிறார். அப்போது, அவருடன் சென்ற மற்றொரு துறை பேராசிரியர் அந்த மாணவியிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி பல்கலைக்கழக பதிவாளரிடம் புகார் அளித்துள்ளார். இதையடுத்து, மாணவியையும், சர்ச்சைக்குள்ளான பேராசிரியரையும் நேரில் அழைத்து பதிவாளர் விசாரணை நடத்தியுள்ளார். பின்னர் இருவரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்துள்ளார். ஆனால், அதில் சமாதானம் அடையாத மாணவி தனது பெற்றோருடன் சென்று பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தரிடம் முறையிட்டுள்ளார். மேலும் பாலியல் தொல்லையில் ஈடுபட்ட பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் காவல் துறையில் புகார் அளிக்கப்போவதாக அந்த மாணவி எச்சரித்துள்ளார்.
தொடர்ந்து, பெரியார் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள் சிலர் மாணவிகளிடம் தகாத முறையில் நடந்து கொள்வதாக செய்திகள் வெளிவருவது வாடிக்கையாக இருப்பதால் கல்லூரி மாணவர்கள், மாணவிகள், பெற்றோர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:
தூத்துக்குடி நீதிமன்றத்தில் 'தர்பார்' படத்தின் மீது அவதூறு வழக்கு