சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி அருகேயுள்ள திப்பம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ். பட்டயப் படிப்பு படித்து வேலை தேடிவந்த இளைஞர் சதீஷ் நேற்று மதியம் வீட்டில் அருகே நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த காவல் துறையினர், சதீஷிடம் விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனக் கூறி பனமரத்துப்பட்டி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
சேலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட சதீஷிடம் காவல் துறையினர் இரவு சுமார் 11 மணி வரை விசாரணை நடத்தியதாகக் கூறப்படுகிறது. விசாரணை முடிந்து வீட்டிற்கு வந்த சதீஷ், இன்று காலை நீண்ட நேரமாகியும் அறையிலிருந்து வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவரது பெற்றோர், உறவினர்கள் கதவை உடைத்து பார்த்தபோது தூக்கில் தொங்கிய நிலையில் சதீஷ் சடலமாக இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
மேலும் அவர் இருந்த அறையில் நான்கு பக்கத்திற்கு கடிதம் எழுதி வைத்திருந்ததைக் கண்டனர். இது குறித்து உடனடியாகக் காவல் துறையினருக்குத் தகவல் அளிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், இறந்தவரின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இது குறித்து சதீஷின் பெற்றோர், உறவினர்கள் கூறுகையில், உயிரிழந்த சதீஷின் நண்பரான சீனிவாசன் என்ற கிருபாகரன், சேலத்தில் உள்ள தனியார் செவிலியர் கல்லூரியில் பயிலும் மாணவியை அழைத்து சென்றுள்ளார். இதன் காரணமாக சீனிவாசன் குறித்து கேட்பதற்காக சதீஷை காவல் துறையினர் அழைத்துச் சென்று, 6 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
விசாரணையின்போது காவல் துறையினர் சதீஷை அடித்து துன்புறுத்தியதாக அவரது உறவினர்கள் குற்றஞ்சாட்டினர். இன்று காலை மீண்டும் விசாரணைக்கு அழைத்ததால் விசாரணைக்கு அஞ்சி சதீஷ் தற்கொலை செய்துகொண்டதாகத் தெரிவித்தனர். மேலும் இது தொடர்பாக உரிய விசாரணை நடத்திட வேண்டும் என்றும் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
இதனிடையே சதீஷ் உயிரிழந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த அவரது உறவினர்கள், நண்பர்கள் சேலம் அரசு மருத்துவமனையில் திரண்டதால் பெரும் பரபரப்பு நிலவியது. இந்நிலையில் சதீஷ் உடல் மீட்கப்பட்ட அறையிலிருந்து கைப்பற்றப்பட்ட நான்கு பக்க கடிதத்தில், நீண்ட நாள்களாக வேலை தேடிவந்ததாகவும் வேலை எதுவும் கிடைக்கவில்லை.
அதனால் மன உளைச்சலில் இருந்ததாகவும் தற்போது காவல் துறையினர், தன்னிடம் விசாரணை மேற்கொண்டது தங்கள் குடும்பத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தான் தற்கொலை செய்யப்போவதாக எழுதிவைத்துள்ளார். மேலும் கடிதத்தை கைப்பற்றிய காவல் துறையினர் தற்கொலை சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
கல்லூரி மாணவியை அழைத்துச் சென்ற சீனிவாசனுக்கு ஏற்கனவே திருமணம் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: வனவிலங்குகளை கண்காணிக்க லேசர் சென்சார்!