திருநெல்வேலி: கன்னியாகுமரி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில், நெல்லை மாவட்டம் ரெட்டியார்பட்டி அருகே மருத்துவக் கழிவுகள் மீண்டும் கொட்டப்பட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன் கேரளாவில் இருந்து ஆபத்தான மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், தற்போது மீண்டும் அதேபோன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கடந்த நிகழ்வைத் தொடர்ந்து, மருத்துவமனைகளுக்கு சுகாதாரத் துறை கடுமையான எச்சரிக்கையை விதித்திருந்தது. இந்நிலையில் தேசிய நெடுஞ்சாலை ரெட்டியார்பட்டி அருகே மீண்டும் மருத்துவ கழிவு கொட்டப்பட்டது. தொடர்பான வீடியோ இன்று வெளியானது. அதில் குறிப்பாக காலாவதியான மாத்திரை, டானிக் பாட்டில்கள் அதிகளவு கொட்டப்பட்டிருந்தது.
உள்ளூர் மருத்துவக் கழிவுகள்?
மேலும், மருத்துவ கழிவுகளை தீ வைத்து எரிக்கவும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. பாதி எரிந்த நிலையில் அவை இருந்ததால், கொட்டிய சமூக விரோதிகள் அதை எரிப்பதற்கு முயற்சி செய்து, பின்னர் கைவிட்டு சென்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இதனையடுத்து மருத்துவக் கழிவுகளை கொட்டியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், கழிவுகளை உடனே அகற்ற வேண்டும் எனவும் வலுவான கோரிக்கை எழுந்ததுள்ளது.
அதேசமயம், தற்போது கொட்டப்பட்டிருப்பது கேரள மாநில மருத்துவக் கழிவுகள் இல்லை என மாநகராட்சி அலுவலர்கள் தெரிவித்தனர். உள்ளூரைச் சேர்ந்த சில மருத்துவ நிறுவனங்கள் காலாவதியான மருந்து கழிவுகளை கொட்டிருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.
எனவே, இந்த மருத்துவ கழிவுகளை கொட்டியது யார் என்று விவரங்களை மாநகராட்சி அலுவலர்கள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். தொடர்ந்து நேரில் சென்று மருத்துவக் கழிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
கேரள மருத்துவக் கழிவு விவகாரம்:
சில மாதங்களுக்கு முன் திருநெல்வேலி மாவட்டம் புறநகர் பகுதியான முக்கூடல் சுத்தமல்லி உள்ளிட்ட பகுதிகளில் கேரளாவில் இருந்து கொண்டுவரப்பட்ட மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டது. இந்த விவகாரம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
அதனைத்தொடர்ந்து தேசிய பசுமை தீர்ப்பாயம் இந்த விவகாரத்தை விசாரணைக்கு எடுத்து கடுமையான கண்டனங்களை தெரிவித்தது. அதுமட்டுமில்லாமல், கழிவுகளை உடனடியாக கேரளாவுக்கு திரும்ப எடுத்துச்செல்ல வேண்டும் என்று ஆணை பிறப்பித்தது.
இதையும் படிங்க: எல்லை தாண்டி நெல்லையில் கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகள் - 30 லாரிகளில் கேரளாவுக்கு திருப்பி அனுப்பிவைப்பு! |
அந்த உத்தவின் பேரில், ஆபத்தான மருத்துவக் கழிவுகள் முழுமையாக அகற்றப்பட்டு, மீண்டும் கேரளாவிற்கே கொண்டு செல்லப்பட்டது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த தமிழ்நாடு காவல்துறையினர், ஐந்திற்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.
மேலும், மருத்துவ கழிவுகளை சுகாதாரத் துறை வழிகாட்டுதலின்படி தான் அகற்ற வேண்டும் என மருத்துவமனை நிர்வாகங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது நினைவுகூரத்தக்கது.