சென்னை: திருப்பரங்குன்றத்தை கலவர பூமியாக மாற்ற பாஜக - ஆர்எஸ்எஸ் முயற்சி செய்வதாக காங்கிரஸ் கமிட்டியின் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை குற்றம்சாட்டியுள்ளார். மேலும் நாளை காங்கிரஸ் சார்பிஸ் மதநல்லிணக்க வழிபாடு நடத்தப் போவதாகவும் அவர் தெரிவித்தார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைமையகமான சென்னை சத்தியமூர்த்தி பவனில் அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அப்போது அவர் கூறியதாவது:
வடமாநிலங்களில் பாஜக - ஆர்எஸ்எஸ் அமைப்புகளின் மத அரசியல் தோல்வி அடைந்து வருகிறது, இப்பொழுது ஆறுபடை வீட்டை கலவரப் பூமியாக மாற்றுவதற்கும் அந்த கும்பல் வெளியே இருந்து மக்களை கொண்டு வந்து பிரச்னை செய்வதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.
நாளை காங்கிரஸ் பேரியக்கத்தின் சார்பாக திருப்பரங்குன்றதில் ஆலய வழிபாடு செய்ய இருக்கிறோம், அதே போன்று சிக்கந்தர் பாதுஷாவை வழிபட போகிறோம். இது ஒரு மத நல்லிணக்க வழிபாடு.
தமிழக அரசு மிக கவனமாக இருக்க வேண்டும். எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத வளர்ச்சியில் தமிழகத்தில் ஏற்பட்டு கொண்டிருக்கிறது. அந்நிய முதலீடு, தொழிற்சாலை உற்பத்தி, உள்நாட்டு உற்பத்தி, ஏற்றுமதி, கல்வித்துறை புரட்சி போன்றவற்றை கெடுப்பதற்கு ஆர்எஸ்எஸ் - இந்து முன்னணி அமைப்புகள் பாஜக துணையோடு தமிழ்நாட்டை கலவர பூமியாக மாற்றுவதற்கு முயற்சி செய்து வருகிறார்கள்.
அவர்களது இந்த முயற்சியை அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைந்து எதிர்க்க வேண்டும். ஆன்மிகம் என்பது வேறு அரசியல் என்பது வேறு, ஆகவே தமிழ்நாடு அரசு இரும்பு கரம் கொண்டு இதனை அடக்க வேண்டும். தமிழக முதல்வர் இதில் எந்தவித தயவு தாட்சணையும் காட்டக்கூடாது, முருகன் மிகவும் சக்தி வாய்ந்த இறைவன். அவரிடம் மதவெறி சக்திகளின் அரசியல் எடுபடாது. திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினராக எப்படியாவது ஆக வேண்டும் என்று அனைத்து குறுக்கு வழிகளையும் கடைபிடிக்கிறார்கள், இதற்கு அறுபடை முருகன் அனுமதிக்க மாட்டார், சிக்கந்தர் பாதுஷா இந்துக்களுடன் இணக்கமாக இருந்தவர். அவர்களையும் பார்க்கப் போகிறோம்,
எச் ராஜா, அண்ணாமலை போன்றவர்கள் காலம் காலமாக இஸ்லாமியர்களை தொடர்ந்து விமர்சித்து வருகிறார்கள், ஸ்ரீரங்கம் கோயிலில் உள்ள துலுக்க நாச்சியார் சிலையை யார் வைத்தது? அதை எதிர்த்து இவர்கள் போராட முடியுமா? சிக்கந்தர் பாதுஷாவை எதிர்த்து போராடும் நீங்கள் ஏன் துலக்க நாச்சியாருக்கு எதிராக போர்க்கொடி தூக்க மறுக்கிறீர்கள்?
தேசத்தின் நான்காவது தூணாக விளங்கும் பத்திரிகையாளருக்கு எந்த விதத்திலும் அச்சுறுத்தலையும் ஏற்படுத்தக் கூடாது.
பாஜக ஆளுநர்களுக்கு உச்சநீதிமன்றம் எவ்வளவு கொட்டு வைத்தாலும் அவர்கள் திருந்துவதாக இல்லை, உச்சநீதிமன்றம் 24 மணி நேரம் கெடு அளித்திருப்பதை ஆளுநர் ஆர் எஸ் எஸ் க்கு ஆதரவாக தான் செயல்படுவார். பொறுத்திருந்து பார்ப்போம்,
இவ்வாறு காங்கிரஸ் கமிட்டியின் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.