சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளிலுள்ள பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், அம்மா உணவகங்கள், உழவர் சந்தைகள், மாநகராட்சி அலுவலகங்களில், நிலவேம்புக் குடிநீர் வழங்கும் நிகழ்வை மாநகராட்சி ஆணையர் சதீஷ் துவக்கிவைத்தார்.
பாரத ரத்னா, புரட்சித் தலைவர் டாக்டர் எம் ஜி ஆர் மத்தியப் பேருந்து நிலையத்திற்கு வந்துசெல்லும் பொதுமக்களுக்கு சேலம் மாநகராட்சி சார்பில், நிலவேம்புக் குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் நிலவேம்புக் குடிநீர் விநியோகத்தைத் துவக்கிவைத்து பொதுமக்கள், மாநகராட்சித் துப்புரவு பணியாளர்கள் ஆகியோருக்கு வழங்கினார்.
பருவமழைக்கு முன்னரே சேலம் மாநகராட்சியிலுள்ள பகுதிகளில், சுகாதாரப் பணிகளைத் தீவிரப்படுத்தத் துவங்கிவிட்டதாகத் தெரிவித்த அவர், தினம்தோறும் வீடுவீடாகச் சென்று, பொதுமக்களிடையே தீவிரத் தொற்றுநோய் தடுப்புப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
இதன் ஒரு பகுதியாக நகரப் பேருந்து நிலையம், ரயில் நிலையம், 16 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், 11 அம்மா உணவகங்கள், நான்கு உழவர் சந்தைகள், மாநகராட்சி ஆணையாளர் அலுவலகம், நான்கு மண்டல அலுவலகங்களில் தினம்தோறும் நிலவேம்புக் குடிநீர் வழங்கப்பட இருப்பதாகவும், பொதுமக்கள் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தித் தங்களது உடல்நலனை பாதுகாத்துக் கொள்ளுமாறு ஆணையாளர் சதீஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.