சேலம்: நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் பாமக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, சேலம் கோட்டை மைதானத்தில் பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் நேற்று (பிப். 15) பரப்புரை செய்தார். அப்போது அவர் பேசியதாவது, "நாடாளுமன்றம், சட்டப்பேரவை, உள்ளாட்சி அமைப்பு என இந்தியாவில் மூன்றடுக்கு நிர்வாக அமைப்பு உள்ளது.
இதில், உள்ளாட்சி அமைப்பு முக்கியமானதாகும். உள்ளாட்சி அமைப்பில் மேயர் பதவி அதிகாரமிக்க பதவி. பாமக வேட்பாளர்கள் வெற்றி பெற்று மேயராக தேர்வு செய்யப்படும்போது, சேலம் மாநகராட்சியில் மதுக்கடைகளை மூட முதல் கையெழுத்து போடப்படும். பாமகவைத் தவிர யாரும் இதை சொல்ல முடியாது. கடந்த 55 ஆண்டுகளாக திமுக, அதிமுக ஆட்சி செய்து வருகிறது. திராவிட கட்சிகளால் தமிழ்நாட்டில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. சேலத்தில் உள்ள அதிகாரம் சென்னைக்கு சென்றுவிடுகிறது.
சேலத்தின் நீர் தேவை
எனவே, உள்ளாட்சி அமைப்புகளுக்கான அதிகாரத்தைத் தர வேண்டும். ஆனால், சென்னையின் அதிகாரத்தை டெல்லி எடுத்துக் கொண்டுவிட்டதாக திராவிட கட்சிகள் போராடுகின்றன. மேட்டூர் அணையிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் 125 டிஎம்சி தண்ணீர் கடலில் கலந்து வீணாகிறது. எனவே, ஐந்து டிஎம்சி உபரி நீரை எடுத்து சேலத்திற்கு செயல்படுத்திட வேண்டும். அத்திக்கடவு - அவினாசி திட்டம் ரூ.2,500 கோடியில் செயல்படுத்தப்படுகிறது. அதேபோல, சேலத்திலும் உபரி நீர் திட்டத்தை செயல்படுத்திட வேண்டும்.
ஆத்தூர், தலைவாசல் வரை உபரி நீர் திட்டம் செல்ல வேண்டும். பனமரத்துப்பட்டி ஏரியின் கொள்ளளவு 1.25 டிஎம்சி ஆகும். ஏரியை ஆழப்படுத்தினால் கூடுதலாக 1.50 டிஎம்சி நீரை தேக்க முடியும். உபரி நீரைக் கொண்டு ஏரியை நிரப்பினால், சேலம் மாநகரின் ஒட்டுமொத்த நீர் தேவையான 1.50 டிஎம்சியை இதில் பூர்த்தி செய்ய முடியும்.
பெரியார் கனவை நிறைவேற்றியது பாமகதான்
உள்ளாட்சித் தேர்தலில் மாற்றம் தர வேண்டும். முன்னேற்றத்தைக் கொண்டு வருவோம். நீட் தேர்வை யார் கொண்டு வந்தது என்பது பற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியும் மேடையில் சவால் விட்டுப் பேசி வருகின்றனர். அந்த விவாதத்தில் நானும் கலந்து கொள்வதாகத் தெரிவித்துள்ளேன். நீட் சமூக நீதிக்கு எதிரானது. காங்கிரஸ், திமுக, பாஜக, அதிமுக ஆகிய நான்கு கட்சிகள்தான் நீட் தேர்வைக் கொண்டு வந்தது.
நீட் தேர்வை ஒழிக்க வேண்டும். அதற்கு பாமக உறுதுணையாக இருக்கும். சேலத்தில் தான் நாட்டிலேயே முதன்முறையாக மதுவிலக்கு கொண்டு வரப்பட்டது. 1937ஆம் ஆண்டு ராஜாஜிதான் மதுவிலக்கை கொண்டு வந்தார். 1952ஆம் ஆண்டு சேலத்தில் ரயில்வே கோட்டம் அமைக்க வேண்டும் எனப் பெரியார் பேசினார். பெரியாரின் கனவை நிறைவேற்றியது பாமகதான். சேலம் ரயில்வே கோட்டம், சேலம் பல்நோக்கு மருத்துவமனை ஆகிய திட்டங்களைக் நாங்கள் கொண்டு வந்தோம்.
பாமகவை வெற்றி பெற வைத்தால் பாதுகாக்கப்பட்ட குடிநீர் தருவோம். சேலத்திற்கு முழுமையான நகர்புற திட்டத்தைக் கொண்டு வருவோம். அதேபோல, பசுமை தீவுகள் கொண்டு வரப்படும். திமுகவினர் சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக்கு வந்தனர். ஆனால், வாக்குறுதிகளை மறந்துவிட்டனர். நாம் ஒவ்வொன்றாக அவர்களுக்கு நினைவுபடுத்திக் கொண்டு இருப்போம்" இவ்வாறு அவர் உரையாற்றினார்.
இதையும் படிங்க: தனியார் மருத்துவக் கல்லூரியில் 50% இடங்களுக்கு அரசின் கட்டணம் வசூலிக்க வேண்டும்