சேலம்: கருங்கல்பட்டியைச் சேர்ந்தவர் பெரியசாமி. இவர் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சேலம் மாவட்ட செயலாளராக செயல்பட்டு வருகிறார். கருங்கல்பட்டி உள்ளிட்ட சேலத்தின் பல்வேறு பகுதிகளில் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட நம்பர் லாட்டரி விற்பனை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த திமுக பெண் கவுன்சிலர் தனலட்சுமியின் கணவர் சதீஷ் என்பவர் லாட்டரி விற்பனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. சட்டவிரோத லாட்டரி விற்பனையை தடுத்து நிறுத்திட வேண்டும் என்று பெரியசாமி அதே கருங்கல்பட்டி பகுதியில் பதாகைகள் எழுதி வைத்துள்ளார். மேலும் தேநீர் கடைகள் உள்ளிட்டப் பல இடங்களில் நம்பர் லாட்டரி விற்பனை நடைபெறுவதை, செல்போன் மூலம் வீடியோ எடுத்து காவல்துறை அலுவலர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கும் அனுப்பி வைத்தார்.
இந்த நிலையில் லாட்டரி விற்பனையை நடத்தி வரும் 55வது வார்டு கவுன்சிலரின் கணவர் சதீஷ், பெரியசாமி மீது நேற்று(ஜூலை 12) தனது அடியாட்களை ஏவி கொலை வெறித் தாக்குதல் நடத்தியுள்ளார். இதில் பெரியசாமிக்கு தலை மற்றும் கை கால்களில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மேலும் பெரியசாமிக்கு சொந்தமான கனரக வாகனம் ஒன்றும் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது. பெரியசாமியை தாக்கியவர்களை தடுத்து நிறுத்திய அப்பகுதி மக்கள் மீதும் ஆயுதங்களால் தாக்குதல் நடத்தப்பட்டது.
தொடர்ந்து அவரை மீட்டு கருங்கல்பட்டி மக்கள் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த நிலையில் இந்தச் சம்பவம் குறித்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் பிரதிநிதி பிரபாகரன் கூறுகையில், ''அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை சேலத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனைத் தடுத்து நிறுத்த வேண்டிய காவல்துறை அதிகாரிகள் லாட்டரி விற்பனையாளர்களிடம் கையூட்டு பெற்றுக் கொண்டு அனுமதி அளித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: சேலம் கூட்டுறவுக் கடைகளில் தக்காளி கிலோ ரூ.60-க்கு விற்பனை!
இதை எதிர்த்து குரல் கொடுத்த எங்கள் மாவட்டச் செயலாளர் மீது பயங்கர ஆயுதங்களால் கொலை வெறித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதை வன்மையாக கண்டிக்கிறோம். லாட்டரி விற்பனையைத் தடுத்து நிறுத்தி தாக்குதலில் ஈடுபட்டவர்களை கைது செய்ய காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தச் சம்பவம் தொடர்பாக மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்'' என்று தெரிவித்தார்.
சேலம் அரசு மருத்துவமனையில் பெரியசாமியின் உறவினர்கள் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர்(மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞர்கள் குழு) நூற்றுக்கும் மேற்பட்டோர் குவிந்துள்ளதால் பரபரப்பு நிலவுகிறது. இந்தத் தாக்குதல் சம்பவம் குறித்து அன்னதானப்பட்டி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: ‘தமிழ்நாட்டில் புதிதாக 6 மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்படும்’ - அமைச்சர் மா.சுப்பிரமணியன்!