தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு பணிக்கொடை பணப்பயன்கள் வழங்கும் விழா சேலத்தில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், உயர்கல்வித் துறை அமைச்சர் அன்பழகன், சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை அமைச்சர் சரோஜா ஆகியோர் ஓய்வூதியதாரர்களுக்கு பணப் பயன்களை வழங்கினர்.
இந்த நிகழ்ச்சியின் முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய உயர்கல்வித் துறை அமைச்சர் அன்பழகன், “வெளிநாட்டிற்குச் சென்று தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முதலீடுகளை ஈர்த்து வந்தது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் தொடர்ந்து பேசி வருகிறார். அவருக்கு மக்கள் மீது உண்மையிலேயே அக்கறை இல்லை. முதலமைச்சர் நாற்காலியில் அமர முடியவில்லையே என்ற பொறாமையில்தான் அவர் வெள்ளை அறிக்கை கேட்கிறார்” என்றார்.