சேலம்: மும்பையைச் சேர்ந்தவர், மராத்தி மொழி நடிகர் விநாயக். 28 வயதான இவர், மராத்தி மொழி படங்களிலும், பல்வேறு தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்து வருகிறார்.
தேச ஒற்றுமையை வலியுறுத்தி, கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடைபயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ள இவர் தனது பயணத்தை கன்னியாகுமரியில், கடந்த செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி தொடங்கினார்.
பயணத்தின் 20ஆவது நாளான இன்று (அக்.10) அவர் சேலம் வந்தார். சேலம் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஓமலூர் பகுதியில் வந்த அவரிடம் பொதுமக்கள் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.
தேசியக் கொடியை ஏந்தியபடி, தன்னந்தனியே தேசிய ஒற்றுமையை வலியுறுத்தி, நடைபயணம் மேற்கொள்ளும் விநாயக், நாள் ஒன்றுக்கு 20 கிலோமீட்டர் தூரம் நடக்கிறார்.
தான் செல்லும் வழியில் பொதுமக்களை சந்திக்கும் அவர் பாரம்பரிய பழக்கங்களையும், தேச ஒற்றுமையின் அவசியம் குறித்தும் விளக்குகிறார். இரவு நேரங்களில் கோயில்களில் தங்கும் அவர், இன்னும் நான்கு மாதங்களில் காஷ்மீருக்குச் சென்று தனது பயணத்தை நிறைவு செய்ய உள்ளதாகத் தெரிவித்தார்.
நடிகர் ஒருவர் சமூக நோக்கத்துடன் தேச ஒற்றுமையை வலியுறுத்தி நடைபயணம் மேற்கொண்டுள்ளது பொதுமக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ஐந்தாவது மெகா தடுப்பூசி முகாம்; முதலமைச்சர் ஆய்வு!