சேலம்: மாநகரப் பகுதி மற்றும் மாவட்ட பகுதிகளில் அரசு டாஸ்மாக் மதுபான கடைகளில் கடந்த சில மாதங்களாக கரூர் குரூப் என்று கூறி ஒவ்வொரு டாஸ்மாக் கடைகளிலும் இருபது ஆயிரம் ரூபாய் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை வசூல் வேட்டை செய்து வந்துள்ளனர்.
இதனை கண்டித்து டாஸ்மாக் பணியாளர்கள் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் போராட்டத்தில் ஈடுபட்டனர். கரூர் குரூப் என்று கூறி பணம் பறிக்கும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
இந்நிலையில் சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில் நேற்று இரவு அரசு டாஸ்மாக் மதுபான கடைக்கு வந்த இரண்டு பேர், ‘கரூர் குரூப்பில் இருந்து வந்துள்ளோம், முப்பதாயிரம் ரூபாய் பணம் கொடுங்க' என்று கேட்டுள்ளனர்.
இதனையடுத்து அவர்கள் இருவரையும் அங்கு இருந்த டாஸ்மார்க் பணியாளர்கள் சூழ்ந்து கொண்டு ,' யார் உங்களை அனுப்பி வைத்தார்கள், உங்களை யார் பணம் வாங்க சொன்னது என்று சரமாரியாக கேள்வி எழுப்பினர். தற்பொழுது இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்தில் ’கரூர் குரூப்’ என்று கூறி தொடர்ந்து பணம் பறிக்கும் சம்பவம் அரங்கேறி வருகிறது. இதனை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என டாஸ்மாக் ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: போலி பாஸ்போர்ட்டில் சென்னைக்கு வந்த வங்கதேச பயணி கைது!