சேலம் நகரில் ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் தேவஸ்தானம் அமைந்துள்ளது. ஆரிய வைசியர்களுக்குச் சொந்தமான இந்த தேவஸ்தானத்தில் ஆண்டுதோறும் மே மாதம் 14ஆம் தேதி வாசவி கன்னிகா பரமேஸ்வரியின் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டுவருகிறது. அந்த வகையில் இன்று பன்னிரெண்டாம் ஆண்டு ஜெயந்தி விழா இன்று நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு காலை ஏழு மணிக்கு கோ பூஜை, மஹன்யாசத்தைத் தொடர்ந்து 108 பால்குட ஊர்வலம் நடைபெற்றது. இந்தப் பால்குட ஊர்வலத்தை நிரந்தர மக்கள் நீதிமன்ற தலைவரும், மாவட்ட நீதிபதியுமான குணவதி தொடங்கிவைத்தார். சேலம் டவுன் வேணுகோபால் சாமி திருக்கோயிலில் தொடங்கிய பால்குட ஊர்வலமானது வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் தேவஸ்தானத்தில் முடிவடைந்தது.
பின்னர் பக்தர்கள் கொண்டுவரப்பட்ட பாலை கொண்டு வாசவி கன்னிகா பரமேஸ்வரிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனைகள் ஆகியவை நடத்தப்பட்டது. இதில் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்த பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இந்த விழாவை முன்னிட்டு நாளை முதல் மே 28ஆம் தேதி வரை, தினந்தோறும் இரவு நான்கு ரத வீதிகளில் அம்மன் நகர்வலம் நடைபெற உள்ளது.