சேலம் மாவட்டம் ஓமலூர் காடையாம்பட்டி அருகில் உள்ள பண்ணப்பட்டியில் பகுதியில், பாரத ஸ்டேட் வங்கியின் ஏடிஎம் மையம் உள்ளது.
இதில் ரூபாய் 200 எடுத்த ஒரு வாடிக்கையாளருக்கு ரூபாய் 500 கிடைத்துள்ளது. இதனால், பலரும் அந்த ஏடிஎம் மையத்தில் ரூ.200 டைப் செய்து ரூ.500ஐ எடுத்துச் சென்றுள்ளனர். இரவு நேரத்தில் இதுபோன்று ஏ.டி.எம். இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறால் பணம் கிடைத்ததால் வாடிக்கையாளர்கள் ஏராளமானோர் குவிந்துள்ளனர்.
இந்தத் தகவல் அறிந்த எஸ்பிஐ வங்கி அலுவலர்கள் ஏ.டி.எம். மையத்தை பூட்டியுள்ளனர். ரூ.200 வைக்க வேண்டிய ரேக்கில் ரூ.500 வைத்ததால் வாடிக்கையாளர்களுக்கு 200-க்கு பதில் 500 ஆக கிடைத்துள்ளது என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து வாடிக்கையாளர்களால் நேற்று இரவுவரை எவ்வளவு தொகை எடுக்கப்பட்டது என்பது குறித்து, பணத்தை வைத்தது யார் என்றும் அதற்கான இழப்பை பணம் வைத்த தனியார் நிறுவனமே பொறுப்பு ஏற்க வேண்டும் என்றும் வங்கி அலுவலர்கள் தெரிவித்தனர்.