சேலம் மாவட்டம் தலைவாசலை அடுத்த சாலையம்மன் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் வாழ்ந்துவருகின்றனர். இவர்கள் ஆண்டுதோறும் மக்காச்சோள பயிரினை, பல நூறு ஏக்கரில் நடவு செய்துவருகின்றனர். இந்தாண்டும் வழக்கம்போல மக்காச்சோளப்பயிர் மேல் நடவுசெய்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு சூறாவளிக்காற்றுடன் கன மழை பொழிந்தது. இதன் காரணமாக, ஏறத்தாழ 300 ஏக்கர்களுக்கு மேல் பயிரிடப்பட்டிருந்த மக்காச்சோளப் பயிர்கள் சூறாவளிக்காற்றில் உடைந்தும் சாய்ந்தும் கடும் சேதமடைந்துள்ளன.
கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டிருந்த விவசாய நிலங்களுக்கு பாசனத் தேவைக்கு கடன் வாங்கி, அருகிலுள்ள பகுதிகளிலிருந்து தண்ணீரை விலைக்கு வாங்கிவந்து விவசாயம் செய்துவந்த நிலையில், சூறைக் காற்றால் மக்காச்சோளப்பயிர்கள் சேதம் அடைந்திருப்பது அப்பகுதி விவசாயிகளை வேதனையில் மூழ்கச் செய்துள்ளது.
இது குறித்து விவசாயி அன்பழகன் கூறுகையில், "கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கடந்த 15 நாள்களாகத் தமிழ்நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் வேலைக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருப்பதால் வாழ்வாதாரம் இழந்து நிற்கிறோம்.
அரசு உரிய நடவடிக்கை மேற்கொண்டு போர்க்கால அடிப்படையில் நிவாரணம் வழங்க வேண்டும். வறட்சி, சூறைக்காற்று, கரோனோ வைரஸ் பெருந்தொற்று ஊரடங்கினால் வருமானம் இழப்பு என்று அடுத்தடுத்து சோதனைகள் வந்து எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது.
எனவே, தமிழ்நாடு அரசு உரிய இழப்பீடுகள் வழங்க முன்வர வேண்டும். தனிநபர் பயிரக் காப்பீட்டுத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உறுதிசெய்ய வேண்டும்" என வேண்டுகோள்விடுத்தார்.
சூறாவளியால் பாதிக்கப்பட்டுள்ள கிராமத்திற்குச் சென்று, சேதங்களைப் பார்வையிட்டு, விவசாயப் பயிர்கள் பாதிப்புகள் குறித்து கணக்கெடுக்கும் பணியை தமிழ்நாடு அரசின் தோட்டக்கலை, வருவாய்த் துறையினர் மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க : கிருமி நாசினி மருந்து தெளிக்கும் ராட்சத இயந்திரம் சேலத்தில் அறிமுகம்