சேலம் மாவட்டம் காடையாம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரின் மகள் அதே பகுதியில் உள்ள தனியார் கலை அறிவியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துவந்தார். இந்நிலையில், கடந்த ஒரு வருட காலமாக தனக்கு செல்போன் வேண்டுமென்று தந்தையிடம் அவர் அடம்பிடித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து, நாகராஜ் தனது மகளுக்கு செல்போன் ஒன்றை வாங்கி கொடுத்துள்ளார். இதனிடையே, செல்போன் வந்ததிலிருந்தே படிக்காமல் எந்நேரமும் சமூக வலைதளங்களில் தன்னுடைய கருத்துக்களைப் பதிவிட்டு வந்துள்ளார். இதையடுத்து, அவரின் பெற்றோர் கண்டித்துள்ளனர். அதைத் தாங்கிக் கொள்ள முடியாத அப்பெண் நேற்றிரவு படுக்கை அறையில் தனது துப்பட்டாவால் தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டார்.
இன்று அதிகாலை நீண்ட நேரம் கதவைத் தட்டியும், அவர் கதவைத் திறக்காத காரணத்தால் சந்தேகமடைந்த பெற்றோர் ஜன்னல் வழியாகப் பார்த்தனர். அப்போது, தன்னுடைய மகள் தற்கொலை செய்துகொண்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள், தீவட்டிப்பட்டி காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர் மாணவியின் உடலை சேலம் அரசு பொது மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர். காவல் துறையினர் தற்கொலை குறித்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: தூத்துக்குடியில் நகை திருட்டில் ஈடுபட்ட 6 பேர் கைது!