சென்னை: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வரும் நிலையில், இது குறித்து ஈ டிவி பாரத்திடம் பேசிய பொருளாதார நிபுணர் சேகர், "இந்தியா, கச்சா எண்ணெய்யை அதிகளவு இறக்குமதி செய்வதால் அதற்கான அமெரிக்க டாலர் நாம் கொடுக்கிறோம். இந்தியாவில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தங்களுடைய பணத்தை வெளியே எடுக்கும் போது டாலரில் எடுக்கிறார்கள். தங்கத்தை அதிகளவு இறக்குமதி செய்வதால் அதற்கான பணத்தையும் டாலரில் தான் கொடுக்கிறோம். இதுபோன்ற இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு அமெரிக்க டாலரில் அவர்களுக்கு தொகை வழங்குவதால் டாலர் வெளியே செல்வதால் ரூபாய் மதிப்பு வீழ்ச்சியாகிறது" என்றார்.
மேலும் அவர் கூறுகையில், "அமெரிக்க அதிபராக டிரம்ப் வருவதற்கு முன்னதாகவே இந்திய ரூபாயின் வீழ்ச்சி அடைந்து கொண்டு தான் இருந்தது. அவர் பொறுப்பேற்றதற்கும் இதற்கும் தொடர்பு இல்லை. ரிசர்வ் வங்கியால் ஒரளவு தான் இந்திய ரூபாயின் வீழ்ச்சியை கட்டுப்படுத்த முடியும். இந்தியாவிலிருந்து பொருட்கள் ஏற்றுமதி செய்வது மூலம் வெளிநாடுகளிலிருந்து பணம் வர துவங்கிவிட்டால் இந்திய ரூபாயின் வீழ்ச்சியை தடுக்க முடியும். தொடர்ந்து அதிகமான பொருட்களை ஏற்றுமதி செய்து கொண்டே இருந்தால் ரூபாய் வீழ்ச்சி அடையாமல் மதிப்பை உயர்த்தலாம். வெளிநாடுகளில் வேலை செய்து இந்தியாவிற்க்கு தன்னுடைய வீட்டிற்கு பணம் அனுப்பினால் இங்குள்ளவர்களுக்கு லாபம் தான். சுற்றுலா செல்பவர்களுக்கு டாலர் அதிகமாக செலவிடப்படவேண்டிய சூழல் உள்ளது.
உலக பொருளாதாரம் பலவீனமாக உள்ளது. மேலும் இந்தியாவிலிருந்து முதலீடுகளை வெளியே எடுத்தால் இன்னும் ரூபாய் மதிப்பு வீழ்ச்சியாகும். இந்த ஆண்டு இறுதி வரை ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைந்து மந்த நிலையில் தான் இருக்கும். இந்த ஆண்டு இறுதிக்குள்டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 100 வரை வீழ்ச்சி அடைய வாய்ப்புள்ளது. ரூபாய் மதிப்பு வீழ்ச்சியை கட்டுப்படுத்த இறக்குமதியை குறைத்து இந்தியாவில் உள்ள பொருட்களை ஏற்றுமதியை அதிகளவு செய்வதே ஒரே வழி"
இவ்வாறு பொருளாதார நிபுணர் சேகர் தெரிவித்தார்.