திருப்பத்தூர்: திருமணம் செய்து கொள்வதாக கூறி இளைஞர் தன்னை ஏமாற்றிவிட்டதாக பெண் ஒருவர் திருப்பத்தூர் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
அந்த புகாரில் கூறப்பட்டுள்ளதாவது:
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த அம்பலூர் பகுதியை சேர்ந்த இளம்பெண்ணுக்கு திருமணமாகி இரண்டே மாதத்தில் வாகன விபத்தில் கணவன் இறந்துள்ளார். இந்நிலையில், அந்த பெண்ணுக்கு கடந்த 2019 ஆம் ஆண்டு செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் பகுதியில் உள்ள தனியார் வங்கியில் வேலை கிடைத்துள்ளது. இதனால் வேலையில் சேர திருப்பத்தூரில் இருந்து மறைமலைநகருக்கு வந்தார்.
வேலையில் சேர்ந்த பிறகு அதே வங்கியில் பணியாற்றி வரும் அரக்கோணத்தை சேர்ந்த தன்ராஜ் என்பவருடன் அப்பெண் தங்கையை போல பழகி வந்துள்ளார். பின்னர் ஒரு வருடம் கழித்து தன்ராஜ் அந்த பெண்ணை காதலிப்பதாக கூறியுள்ளார். இதனால் அப்பெண் தன்ராஜுடன் பேசுவதை நிறுத்திக் கொண்டதாக தெரிகிறது.
இருப்பினும் தன்ராஜ் தொடர்ந்து அந்த பெண்ணை திருமணம் செய்துகொள்வதாக கூறி பழகியுள்ளார். இருவரும் தனிமையில் சந்தித்தும் வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் அப்பெண்ணுக்கு வாணியம்பாடியில் உள்ள தனியார் வங்கிக்கு பணிமாற்றம் கிடைத்துள்ளது. அங்கு சென்ற பிறகும் கூட தன்ராஜ் அப்பெண்ணை வற்புறுத்தி பாலியல்ரீதியாக அத்துமீறியதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
கொலை மிரட்டல்
இந்த நிலையில், கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம் கோயம்பேடு பகுதியில் தன்ராஜுக்கு வேறொரு பெண்ணுடன் திருமண ஏற்பாடுகள் நடந்துள்ளது. இதனை அறிந்த அப்பெண் அங்கு சென்று தன்ராஜ் குடும்பத்தினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது தன்ராஜின் குடும்பத்தினர் இவரை கொலை செய்து விடுவதாக மிரட்டி அனுப்பி வைத்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த ஆண்டு ஜூலை மாதம் தன்ராஜ் அண்ணன் யுவராஜ் அப்பெண்ணை தொடர்புகொண்டு, உனக்கு தன்ராஜை திருமணம் செய்து வைப்பதாக சொல்லி அதற்கு ஒரு லட்சம் ரூபாய் கடனாக கேட்டுள்ளார்.
இதையும் படிங்க: சென்னையை உலுக்கிய பள்ளி சிறுமிகள் பாலியல் வழக்கு; சிறுவர்கள் உட்பட 6 பேர் கைது! நடந்ததென்ன?
அப்போது தன்ராஜிற்கு அப்பெண் பத்தாயிரம் ரூபாய் அனுப்பி வைத்துள்ளார். அதனை தொடர்ந்து வாணியம்பாடிக்கு தன்ராஜை அவரது அண்ணன் யுவராஜ் அழைத்து வந்து ஏலகிரி மலை அடிவாரத்தில் அப்பெண்ணையும், தன்ராஜையும் தனியாக இருக்கும் படி கூறிவிட்டு, அங்கிருந்து ஒரு லட்சம் ரூபாயை வாங்கிக் கொண்டு மீண்டும் தன்ராஜ் மற்றும் அவரது அண்ணன் அரக்கோணத்திற்கு சென்றுள்ளனர்.
கட்டப்பஞ்சாயத்து
அதனைத் தொடர்ந்து கடந்த அக்டோபர் மாதம் வாணியம்பாடி அடுத்த புத்துகோவில் பகுதியில் 10க்கும் மேற்பட்ட அடியாட்களுடன் தன்ராஜ் மற்றும் அவரது குடும்பத்தினர் வந்துள்ளனர். அப்போது, அம்பலூர் காவல் துறையினர் உதவியுடன் கட்டப்பஞ்சாயத்து செய்துள்ளனர். அப்போது அவர்கள் நீங்கள் வேறு சமூகம் நாங்கள் வேறு சமூகம். தன்ராஜை திருமணம் செய்து வைக்க முடியாது. 5 லட்சம் ரூபாய் இழப்பீடாக தருகிறோம். சுமுகமாக போகவில்லை என்றால் பெண் மற்றும் அவரது குடும்பத்தினரை கொலை செய்து விடுவதாக மிரட்டியதாக பாதிக்கப்பட்ட பெண் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தன்ராஜுக்கும்அடுத்த மாதம் திருமணம் நடைபெற உள்ள நிலையில், அந்த திருமணத்தை தடுத்து நிறுத்தி தன்ராஜை தன்னுடன் சேர்த்து வைக்குமாறு அப்பெண் புகாரில் கூறியுள்ளார். திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அளித்த புகாரின் பேரில் தன்ராஜை வாணியம்பாடி அனைத்து மகளிர் காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதனைத் தொடர்ந்து பெண்ணிடம் பணம் பறித்த யுவராஜ் மற்றும் அவரது குடும்பத்தினரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.