சேலம்: அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் வீடு உட்பட 58 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று (ஜனவரி 20) அதிகாலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.
வருமானத்திற்கு அதிகமாக 11.32 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக கே.பி.அன்பழகன், அவரது மனைவி, மகன், மருமகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக சேலம் இரும்பாலை பகுதியில் வசித்து வரும் கே.பி.அன்பழகனின் நண்பரான கனிமவளத்துறை உதவி இயக்குநர் ஜெயபால் என்பவர் வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
டிஎஸ்பி கிருஷ்ணராஜ் தலைமையில் 7 பேர் கொண்ட குழுவினர் இன்று காலை 6 மணி முதல் சோதனையில் ஈடுபட்டனர்.
கே.பி.அன்பழகனின் நண்பர் ஜெயபால் தர்மபுரி உள்ளிட்ட இடங்களில் பணியாற்றியுள்ளார். அப்போது கே.பி.அன்பழகனுக்கு ஆதரவாக அவர் செயல்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதன் காரணமாகவே இந்தச் சோதனை நடைபெற்று வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க: முதல்முறையாக இன்ஸ்டாகிராமில் இணைந்த மீரா ஜாஸ்மின்!