சேலம்: செயற்கை நிறமூட்டிகள் கலந்து, குழல் அப்பளம் தயாரிப்பதாக உணவு பாதுகாப்புத் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. உடனடியாக அந்தப் புகாரின் அடிப்படையில், மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் கதிரவன் தலைமையில் உணவுப் பாதுகாப்பு அலுவலர் சிவலிங்கம் அடங்கிய குழு இன்று (ஜூலை 26) நான்கு குழல் அப்பளம் தயாரிக்கும் நிறுவனங்களில் ஆய்வு செய்தது.
ஆய்வில் சிவதாபுரத்தில் உள்ள ருத்ரா டிரேடர்ஸ் என்ற நிறுவனத்தில் செயற்கை நிறம் கலந்த 300 கிலோகிராம் குழல் அப்பளம் கண்டறியப்பட்டது. கந்தம்பட்டியில் உள்ள சீனிவாசன் புட் புராடக்ட்ஸ் என்ற நிறுவனத்தில் 3ஆயிரத்து 440 கிலோகிராம் செயற்கை நிறம் கலந்த குழல் அப்பளம் கண்டறியப்பட்டது. மேற்படி குழல் அப்பளம் பறிமுதல் செய்யப்பட்டு உணவு மாதிரிகளை எடுத்த அதிகாரிகள், அதனை சென்னையில் உள்ள உணவு பகுப்பாய்வு கூடத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது.
பறிமுதல் செய்யப்பட்ட குழல் அப்பளங்களின் மதிப்பு சுமார் ஒன்றரை லட்சம் ரூபாய் எனக் கூறப்படுகிறது. மேற்கண்ட உணவு மாதிரியின் பகுப்பாய்வறிக்கை பெறப்பட்ட பின்னர் ஆய்வறிக்கையின் அடிப்படையில் உணவு பாதுகாப்புச் சட்டத்தின்படி மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், மீதமுள்ள நிறுவனங்களிலும் இதுபோன்ற ஆய்வு மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
குழல் அப்பளம் போன்ற பொருள்களில் செயற்கை நிறமூட்டிகள் சேர்க்கக் கூடாது என்று உணவு பாதுகாப்புச் சட்டம் கூறுகிறது. பலமுறை எச்சரிக்கை விடுத்தும் அதைப் பின்பற்றாமல் குழல் அப்பள தயாரிப்பாளர்கள் செயற்கை நிறமூட்டிகளை அளவுக்கு அதிகமான அளவில் பயன்படுத்துவது இவ்வாய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
இது போன்ற செயற்கை நிறமூட்டிகள் கலந்த குழல் அப்பளம் தயாரித்தாலோ அவற்றைக் கடைகளில் வைத்து விற்றாலோ அப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளனர். மேலும், இது போன்ற தவறுகளை செய்பவர்கள் மீது உணவு மாதிரி எடுத்து அவற்றின் ஆய்வறிக்கையின் அடிப்படையில் அவர்கள் மீது உணவு பாதுகாப்புச் சட்டத்தின்படி வழக்குத் தொடரப்படும் என சேலம் மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த குழல் அப்பளங்களை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிட்டு வருகின்றனர். இதனால், குழல் அப்பளம் தயாரிப்பில், உயிருக்குக் கேடு விளைவிக்கும் செயற்கை நிறமூட்டி வேதிப்பொருள்கள் கலந்து தயாரிக்கப்படுவதால், மக்களுக்கு உயிருக்கே ஆபத்தாக அமையக்கூடும். அத்தகைய கேடுகளை விளைவிக்கக்கூடிய குழல் அப்பளங்களை தயாரிக்கும் நிறுவனங்கள் வரும் காலங்களில் நிறமூட்டிகளை பயன்படுத்தாமல் இயற்கை முறையில் தயாரித்து விற்பனை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சீர்காழி நகராட்சி மீது சிறு வியாபாரிகள் புகார்: இலவச தள்ளு வண்டிகள் பெற கையூட்டு கேட்பதாக குற்றச்சாட்டு!