கரோனா வைரசின் இரண்டாவது அலை தீவிரமாகப் பரவிவருகிறது. தொற்றுப் பரவலைக் கட்டுக்குள் கொண்டுவர மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன. தற்போதைய புள்ளி விவரப்படி இந்தியாவில், ஒரேநாளில் 3.50 லட்சம் பேர் கரோனா தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர்.
நேற்று மட்டும் ஒரேநாளில் இந்தியாவில் 2,624 பேர் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக வட மாநிலங்களில் நிலைமை கையை மீறி சென்றுவிட்டது. தமிழ்நாடு, கேரளா மாநிலங்களிலும் நிலைமை தீவிரத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது.
இதுவரை கரோனாவின் முதல் அலை, இரண்டாம் அலை என உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை ஒரு லட்சத்து 89 ஆயிரத்து 544ஆக அதிகரித்துள்ளது.
தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை ஒரு கோடியே 38 லட்சத்து 67 ஆயிரத்து 997ஆக உள்ளது. 25 லட்சத்து 52 ஆயிரத்து 940 பேர் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். இதுவரை மொத்தமாக 13 கோடியே 83 லட்சத்து 79 ஆயிரத்து 832 தடுப்பூசி மருந்துகள் செலுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் நேற்று மட்டும் புதிதாக ஒரு லட்சத்து 22 ஆயிரத்து 900 நபர்களுக்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம் தமிழ்நாட்டில் 13 ஆயிரத்து 723 நபர்களுக்கும், வெளிமாநிலங்களிலிருந்து தமிழ்நாடு வந்த 44 நபர்களுக்கும் என மொத்தம் 13 ஆயிரத்து 776 நபர்களுக்கு கரோனா வைரஸ் (தீநுண்மி) தொற்று பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில் நேற்று மாவட்ட சுகாதாரத் துறை இணை இயக்குநர் வெளியிட்டுள்ள தகவலில், 478 பேருக்குப் புதியதாக கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றும், இரண்டு பேர் உயிரிழந்தனர் என்றும், இதுவரை சேலம் மாவட்டத்தில் 37 ஆயிரத்து 980 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், அவர்களில் 34,607 பேர் சிகிச்சைப் பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 2,886 பேர் சிகிச்சையில் உள்ளதாகவும், நேற்றுவரை 487 பேர் உயிரிழந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
நிலைமை இப்படி இருக்க, சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் நோயாளிகளின் நோய் எதிர்ப்புச் சக்திக்கு கொடுக்கப்படும் ரெம்டெசிவிர் மருந்து காலாவதியாகிவிட்டதாகத் திடுக்கிடும் தகவல் நமக்கு கிடைத்தது. இதனையடுத்து, அது குறித்த கள ஆய்வில் இறங்கினோம்.
மருத்துவமனையில் ரெம்டெசிவிர் மருந்து கடந்த 11ஆம் தேதியோடு காலாவதியான நிலையில், அந்த மருந்தை வரும் 10ஆம் மாதம்வரை (ஆறு மாதங்கள் நீட்டித்து) பயன்படுத்தலாம் என புதிய லேபிள் ஒட்டப்பட்டிருக்கிறது. இந்த ரெம்டெசிவிர், நோய் எதிர்ப்புச் சக்தியைப் பெரிதும் அதிகப்படுத்தி கரோனாவிலிருந்து நோயாளியை விடுவிக்கும் திறன்வாய்ந்தது.
தமிழ்நாட்டில் ரெம்டெசிவிர் மருந்துக்குத் தட்டுப்பாடு நிலவிவருவதாக ஏற்கனவே தகவல் வெளியாகியிருக்கும் சூழலில், சேலம் மருத்துவமனையில் நடந்திருக்கும் இந்த அவலம் அந்தத் தகவலை உறுதிப்படுத்துவதாகவே இருக்கிறது.
இது தொடர்பாக விளக்கம் கேட்க மருத்துவமனை டீன், மாவட்ட இணை இயக்குநர் ஆகியோரைத் தொடர்புகொண்டோம். ஆனால், அவர்கள் அழைப்பை ஏற்கவில்லை. அவர்கள் விளக்கமளிக்கும்பட்சத்தில் அதையும் பிரசுரிக்க ஈடிவி பாரத் தயாராக இருக்கிறது.